எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு: ஈரோட்டில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து ஈரோட்டில் அ.தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து ஈரோட்டில் அ.தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மதுரை விமான நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட 6 நிர்வாகிகள் மீது 5 பிரிவின் கீழ் மதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு முன்னிலை வகித்தார்.
கோஷங்கள்
முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து அ.தி.மு.க.வினர் எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்டு உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் மனோகரன், ஜெகதீஷ், கோவிந்தராஜன், கே.சி.பழனிசாமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், மாணவர் அணி இணைச்செயலாளர் நந்தகோபால், பெரியார் பகுதி அவைத்தலைவர் மீன் ராஜா, வக்கீல் அணி மாவட்ட தலைவர் துரை சக்திவேல், முன்னாள் கவுன்சிலர் கே.எஸ்.கோபால், எம்.ஜி.ஆர். மன்ற நகர செயலாளர் மூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொங்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கண்டிக்கத்தக்கது
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது இந்த அரசு வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு இதுபோன்ற செயலில் இனி ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் அ.தி.மு.க.வில் உள்ள அத்தனை பேரும் எந்த தியாகத்தையும் செய்வோம்.
நிரந்தர பொதுச்செயலாளர்
சுப்ரீம் கோர்ட்டு அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அவர் சார்பில், நீக்கப்பட்டது அனைத்தும் செல்லும் என்றும் தீர்ப்பில் கூறியுள்ளது. அவர் அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராக விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளார். மேலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று தமிழக முதல்-அமைச்சராகவும் எடப்பாடி பழனிசாமி வரப்போகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.