அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலை நிறுத்த போராட்டம்
தமிழகம் முழுவதும் நேற்று அரசு ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை தொடர வேண்டும். அகவிலைப்படி நிலுவை உடனே வழங்க வேண்டும், தேர்தல் நேரத்தில் தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
அதன்படி வருவாய் துறை சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த, 9-ந் தேதி ஒரு மணி நேர வேலை நிறுத்த போராட்டமும், 23-ந் தேதி தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தப்பட்டது. நேற்று அரசு ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்ட சங்கங்கள் கலந்து கொண்டன.
போராட்டத்தில் பங்கேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று அரசு ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவத்துறை, சுகாதாரத்துறை தவிர மற்ற அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்பட்டு இருந்தன. ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட சில துறை அலுவலகங்கள், 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கியது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்திலும் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். வேலை நிறுத்த போராட்டம் பற்றி தெரியாமல் கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகம் முன் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.