ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
சேலத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ஜெயச்சந்திரன் தாக்கப்பட்டதை கண்டித்து நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாநில தலைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து ரேஷன் கடை பணியாளர்கள் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஆயத்தமாகி வந்தநிலையில், மாநில தலைவரை தாக்கியவர்களை போலீசார் கைது செய்துவிட்டதாக தகவல் வந்தது. இதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சங்க நிர்வாகிகள் அறிவித்தனர். இது தொடர்பாக மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகத்தில் மாநில துணைத்தலைவர் கணேசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில், நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஒரு வாரமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், இதன் எதிரொலியாக கோரிக்கையை ஏற்று போலீசார் 7 பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து ரேஷன் கடை பணியாளர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.