கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
கூட்டுறவு சங்கத்தை மாற்றி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பனமரத்துப்பட்டி
கூட்டுறவு சங்கத்தை மாற்றி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டுறவு சங்கம்
பனமரத்துப்பட்டி ஒன்றியம் கம்மாளப்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. கம்மாளப்பட்டி ஊராட்சி தலைவர் ஆனந்தாயி தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன் முன்னிலை வகித்தார். அப்போது கம்மாளப்பட்டி பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், கம்மாளப்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை, மலைவாழ் மக்கள் பெரும் பல்நோக்கு கூட்டுறவு சங்கமாக மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அப்படி மாற்றும் போது மலைவாழ் மக்களை விட மற்ற சமூக மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே கூட்டுறவு சங்கத்தை பழையபடியே செயல்பட கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
காத்திருப்பு போராட்டம்
ஆனால் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்றும், இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கும் படியும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அறிவிப்புக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அங்கேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த சேலம் மண்டல கூட்டுறவு துணை பதிவாளர் குணசேகரன், மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் விவசாயிகள் சமாதானம் அடையவில்லை. இந்த நிலையில் மாலை 5 மணி வரை விவசாயிகள் அங்கேயே காத்திருந்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கை கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படாததால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.