பஞ்சமி நிலத்தை மீட்கக்கோரி குடிசைகள் அமைத்து குடியேறும் போராட்டம்


பஞ்சமி நிலத்தை மீட்கக்கோரி குடிசைகள் அமைத்து குடியேறும் போராட்டம்
x

தேனி அருகே பஞ்சமி நிலத்தை மீட்கக்கோரி குடிசைகள் அமைத்து மக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

தேனி அருகே பஞ்சமி நிலத்தை மீட்கக்கோரி குடிசைகள் அமைத்து மக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பஞ்சமி நிலம்

தேனி அருகே வடபுதுப்பட்டியில் பஞ்சமி நிலம் என்று கூறப்படும் நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி, வீடு இல்லாத தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மக்கள் சிலர் கடந்த வாரம் அந்த நிலத்தில் குடியேறும் போராட்டம் நடத்த முயன்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

இந்தநிலையில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் இன்று வடபுதுப்பட்டியில் மலைக்கரட்டு அடிவாரத்தில் உள்ள இடத்துக்கு, கம்புகள், தார்ப்பாய், கடப்பாரை, மண்வெட்டி ஆகியவற்றுடன் வந்தனர். அவர்களுடன் ஜெய்பீம் புரட்சிப்புலிகள் அமைப்பின் நிறுவன தலைவர் அருந்தமிழரசு மற்றும் நிர்வாகிகள் வந்தனர்.

குடியேறும் போராட்டம்

அவர்கள் இப்பகுதியில் குடிசை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக 10 குடிசைகள் அமைத்து அதில் குடியேறும் போராட்டம் நடத்தினர். பின்னர் மேலும் 20-க்கும் மேற்பட்ட குடிசைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர், பெரியகுளம் தாசில்தார் ராணி தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் அங்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வீடு இல்லாத மக்களுக்கு மாற்று இடத்தில் பட்டா வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இதே பகுதியில் தான் பட்டா வழங்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

பரபரப்பு

பல ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் பட்டா வழங்கப்பட்டுள்ளதால், முறையாக விசாரணை நடத்தி அந்த பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதன்பிறகு வீட்டுமனைப்பட்டா வழங்க இயலும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், அந்த மக்கள் அதை ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர். அமைக்கப்பட்ட குடிசைக்குள் பாய் விரித்து படுத்து ஓய்வு எடுக்க தொடங்கினர். மாலையில் மீண்டும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அதை ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story