தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்த போராட்டம்
மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
தொழிற்சாலைகளுக்கு உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி நேற்று ராணிப்பேட்டை மற்றும் சிப்காட்டில் உள்ள சிறு குறு தொழிற்சங்கம், எம்மரிங் லெதர் தொழிற்சங்கம், பெருந்தலைவர் காமராஜர் குறுந்தொழிற்சங்கம், பெல் சப்ளையர்ஸ் மற்றும் பெல் ஆன்சலரி சங்கம், அரக்கோணம் சிட்கோ தயாரிப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன.
தொழிற்சாலைகளுக்கு தமிழக அரசு உயர்த்தியுள்ள நிலை கட்டணம், பரபரப்பு நேர கட்டணம் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும், சோலார் மேற்கூரை, பின்னல் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை சிப்காட், சோளிங்கர், அரக்கோணம், திமிரி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறு குறு, நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தன.
மேற்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே உண்ணாவிரதம், மின்னஞ்சல், விரைவு அஞ்சல் அனுப்புதல் என பலகட்ட போராட்டங்களுக்கு பின்பு இந்த உற்பத்திநிறுத்த போராட்டத்தை நடத்தியதாக ராணிப்பேட்டை மாவட்ட சிறு, குறு, நடுத்தர தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் முரளி கூறினார்.
இந்த போராட்டம் காரணமாக பெரும்பாலான தொழிற்சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.