வாணியம்பாடி அருகேகூட்ட நெரிசலில் சிக்கி 4 மூதாட்டிகள் பலி
வாணியம்பாடியில் தனியார் சார்பில் வழங்கப்பட இருந்த சேலைகளை பெறுவதற்காக டோக்கன் பெற வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மூதாட்டிகள் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக தனியார் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
வாணியம்பாடி
வாணியம்பாடியில் தனியார் சார்பில் வழங்கப்பட இருந்த சேலைகளை பெறுவதற்காக டோக்கன் பெற வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மூதாட்டிகள் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக தனியார் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
தைப்பூச விழா
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் ஜின்னாசாலை அருகே தனியார் நிறுவனத்தினர் சார்பில் தைப்பூசத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் இலவசமாக வேட்டி மற்றும் சேலை வழங்கி வந்துள்ளனர்.
அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூசம் கொண்டாடப்படுவதையொட்டி இலவச சேலை பெறுபவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என நிறுவனத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
டோக்கன் வாங்காவிடில் சேலை கிடைக்காது என தகவல் பரவியதால் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் டோக்கன் வாங்குவதற்காக அந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடத்திற்கு வரத் தொடங்கினர்.
2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு திரண்டனர். கதவு மூடப்பட்டிருந்ததால் அனைவரும் உள்ளே செல்ல காத்திருந்தனர்.
நிலைதடுமாறி விழுந்தனர்
இந்த நிலையில் தனியார் நிறுவன ஊழியர்கள் கதவை திறந்தனர். அப்போது பெண்கள் அனைவரும் ஒரே நேரத்தில் உள்ளே செல்ல முண்டியடித்தனர். கூட்ட நெரிசலால் முன் வரிசையில் நின்றிருந்த வயதானவர்கள் நெரிசலில் சிக்கி நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
அந்த நேரத்தில் மற்ற பெண்கள் அனைவரும் முன்னோக்கி வந்தபோது கீழே விழுந்த பெண்களை மிதித்தவாறு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நெரிசலில் சிக்கி சுமார் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
தகவலறிந்த வாணியம்பாடி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முண்டியடித்தவர்களை கலைந்து செல்ல செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதன்பின் கீழே விழுந்து படுகாயத்துடன் மயங்கி கிடந்த பெண்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
4 மூதாட்டிகள் பலி
அங்கு ஈச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த நாகம்மாள் (வயது 60), குரும்பட்டி பகுதியைச் சேர்ந்த வள்ளியம்மாள் (60), அரபாண்டகுப்பம் பகுதியை சேர்ந்த ராஜாத்தி (62), பழைய வாணியம்பாடி பகுதியை சேர்ந்த மல்லிகா (75) ஆகிய 4 மூதாட்டிகள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
மேலும் வாணியம்பாடியை அடுத்த குரும்பட்டி பகுதியை சேர்ந்த லிங்கம்மாள் (45), லலிதா (40), சின்னம்மாள் (60), பட்டு (55), நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த எல்லம்மாள் (65), தேவஸ்தானம் பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் (80), தும்பேரி பகுதியை சேர்ந்த சின்னம்மாள் (70), உலக்கியமாள் (65), புஷ்பா (50), அரப்பாண்டகுப்பம் பகுதியை சேர்ந்த மரகதம் (55), பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் (55), புதூர் பகுதியைச் சேர்ந்த பட்டம்மாள் (60) உள்பட 15 பேர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உறவினர்களும் அங்கு பதற்றத்துடன் நின்றிருந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பணி முடிந்து சென்ற டாக்டர்களும், செவிலியர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். காயம் அடைந்தவர்கள் சிலரது நிலை கவலைக் கிடமாக உள்ளது.
கலெக்டர் விரைவு
சம்பவம் நடந்த இடத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா, வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா ஆகியோர் வந்து பார்வையிட்டு விசாரணையை தொடங்கினர்.
வாணியம்பாடி கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., நகர தி.மு.க. செயலாளர் சாரதிகுமார் உள்பட பிரமுகர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்களையும், உயிரிழந்த மூதாட்டிகளின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
உரிமையாளர் கைது
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தெரிவிக்கையில், ''சேலை வழங்குவதற்காக தனியார் நிறுவனத்திற்கு 5-ந் தேதிதான் (அதாவது இன்று) அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஒரு நாள் முன்னதாகவே நேற்று டோக்கன் வழங்குவதை அறிந்த ஏராளமான பெண்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் அதிகம் ஏற்பட்டு 4 மூதாட்டிகள் துரதிர்ஷ்டவசமாக இறந்து விட்டனர்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் அய்யப்பன் (56) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார்.
ஒரே நேரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரூ.2 லட்சம் நிதிஉதவி
வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி 4 பேர் பலியானதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்த துயர சம்பவத்தை கேள்வியுற்று, நான் மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வயதான 4 பெண்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், கடும் காயம் அடைந்து, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரண நிதி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.