மாட்டு கொட்டகையில் பதுக்கிய100 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
மொளசி அருகே மாட்டு கொட்டகையில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
பள்ளிபாளையம்
குட்கா பொருட்கள்
திருச்செங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டு இமயவர்மன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் மற்றும் பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சுகுமார், மொளசி சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மொளசி பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அக்கமாபாளையம் அருகே சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்தார். போலீசார் வண்டியை நிறுத்தி அந்த நபரை பிடிக்க செல்லும்போது, அவர் போலீசாரை கண்டதும் ஓட முயற்சித்தார். பின்னர் அந்த நபரை துரத்தி மடக்கி பிடித்தனர். அவர் வைத்திருந்த பையில் 70 பாக்கெட் ஹான்ஸ் மற்றும் குட்கா இருந்தது.
பின்னர் போலீசாா் அந்த நபரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர். அதில் அவர் அக்கமாபாளையம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பாலசுந்தரம் (வயது48) என்பதும் குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
தொழிலாளி கைது
இதைத்தொடர்ந்து போலீசார் அவரது வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டில் 10 கிலோ குட்கா பொருட்களும், அருகில் உள்ள மாட்டு கொட்டகையில் ஐந்து மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. பின்னர் மொளசி போலீசார் பாலசுந்தரம் மீது வழக்குப்பதிந்து கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். அவரிடமிருந்து மொத்தம் 100 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.75 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.