ஏரியில் மீன்பிடிக்க சென்றவர் சேற்றில் சிக்கி பலி
தலைவாசல் அருகே ஏரி சேற்றில் சிக்கி மீன்பிடிக்க சென்றவர் பலியானார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.
தலைவாசல்
தலைவாசல் அருகே ஏரி சேற்றில் சிக்கி மீன்பிடிக்க சென்றவர் பலியானார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.
மீன்பிடிக்க வந்தனர்
பெரம்பலூர் மாவட்டம் தொண்டைமான் துறையை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது55). இவரும், அதே ஊரை சேர்ந்த ஆரோக்கியசாமி (57), ஜோசப் (58) ஆகிய 3 பேரும் தலைவாசல் அருகே லத்துவாடி ஏரிக்கு நேற்று மீன்பிடிக்க வந்துள்ளனர்.
இதில் பன்னீர்செல்வம் மட்டும் ஏரிக்குள் மீன் பிடிக்க சென்று உள்ளார். மற்ற இருவர்களும் ஏரிக்கரையில் அமர்ந்து இருந்தனர். நீண்ட நேரம் ஆகியும் பன்னீர்செல்வம் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த நண்பர்கள் ஆரோக்கியசாமி, ஜோசப் ஆகிய இருவரும் வீரகனூர் போலீஸ் நிலையத்துக்கும், வீரகனூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
உடல் மீட்பு
அவர்கள் விரைந்து வந்து பன்னீர்செல்வத்தை தேடினர். அப்போது பன்னீர்செல்வம் ஏரியில் உள்ள சேற்றில் சிக்கி பலியானது தெரிய வந்தது. உடனே தீயணைப்பு நிலைய வீரர்கள் பன்னீர்செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பலியான பன்னீர்செல்வத்துக்கு சகாயமேரி என்ற மனைவியும், 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவர்கள், பன்னீர்செல்வம் உடலை பார்த்து கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.