போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நெல்லை
தினந்தோறும் அவதிப்படும் வாகன ஓட்டிகள்: போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நெல்லை- இணைப்பு சாலைகள் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்
நெல்லை மாநகரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. நகரில் மக்கள்தொகை அதிகரித்து வருவதற்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. ஆனால், அதற்கு ஏற்ப சாலை வசதி இல்லாததால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது.
போக்குவரத்து நெரிசல்
நெல்லை வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, பாளையங்கோட்டை மார்க்கெட், சமாதானபுரம், தெற்கு பஜார், பாளையங்கோட்டை பஸ் நிலையம், நெல்லை சந்திப்பு, தச்சநல்லூர், டவுன், மேலப்பாளையம், பேட்டை, பழைய பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் என்பது வாகன ஓட்டிகளுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. பல நேரங்களில் வாகனங்கள் ஊர்ந்து தான் செல்ல வேண்டி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தினந்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர்.
போக்குவரத்து போலீசாரை பொறுத்தவரை தங்களது பணியை செய்து வருகின்றனர். அவர்கள், இருக்கின்ற சாலையில் போக்குவரத்து தடையின்றி செல்ல முழுமூச்சாக பணியாற்றி வருகிறார்கள்.
அதிருப்தி
ஆனால், போக்குவரத்து நெருக்கடி பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பு அரசுக்கு மட்டுமே உள்ளது. நெல்லை மாநகராட்சி நிர்வாகம், வண்ணார்பேட்டையில் அண்ணா சாலை மற்றும் டவுனில் ஆர்ச்-அருணகிரி தியேட்டர் இணைப்பு சாலை ஆகிய 2 சாலைகளை மட்டும் உருவாக்கி உள்ளது. அவை தற்போதும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது.
ஆனால், புதிய இணைப்பு சாலைகளை உருவாக்கும் விஷயத்தில் மாநகராட்சி கவனம் செலுத்தவில்லை என்ற அதிருப்தி நிலவுகிறது. அதாவது, நெல்லை ஸ்ரீபுரத்தில் இருந்து வயல் தெரு வழியாக அருணகிரி தியேட்டர் வரை ஒரு இணைப்பு சாலையும், பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் இருந்து வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையை இணைக்கும் வகையில் ஒரு இணைப்பு சாலையும் அமைக்க அப்பகுதியை சேர்ந்தவர்கள் இடத்தை தானமாக கொடுக்க தாங்களாகவே முன்வந்தபோதிலும், அதை மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதுதொடர்பாக பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
இணைப்பு சாலைகள்
பாளையங்கோட்டை சேர்ந்த ரமேஷ்:-
பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள திருவனந்தபுரம் சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் நேருஜி கலையரங்கத்தில் இருந்து, தெற்கு புறவழிச்சாலையை இணைக்கும் வகையில் ஒரு இணைப்பு சாலை அமைப்பதற்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. ஆனால், இதுவரை அந்த சாலை அமைக்கப்படவில்லை. எனவே, மாநகராட்சி நிர்வாகம் இதற்கு முன்னுரிமை அளித்து அந்த சாலையை உடனடியாக அமைக்க வேண்டும். மேலும், தெற்கு புறவழிச்சாலையில் பாளையங்கால்வாய் கரையில் தொடங்கி, பாளையங்கோட்டை பஸ் நிலையம் மற்றும் நேருஜி கலையரங்கத்தை இணைக்கும் வகையில் ஒரு சாலை அமைந்து உள்ளது. அதை மேம்படுத்தி பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.
இதுதவிர தியாகராஜநகரில் அமைக்கப்பட்டு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ரெயில்வே மேம்பால பணியையும் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மேலும் குலவணிகர்புரத்தில் திட்டமிடப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள ரெயில்வே மேம்பால பணியையும் தொடங்க வேண்டும். அத்துடன் எங்கெல்லாம் புதிய இணைப்பு சாலைகள் அமைக்க இடவசதி உள்ளதோ, அங்கு இப்போதே அதற்கான பணிகளை தொடங்க வேண்டும்.
பயண தூரம் குறையும்
முன்னீர்பள்ளத்தை சேர்ந்த சண்முகசுந்தரம்:-
நான் நெல்லை டவுனில் உள்ள கடையில் வேலை செய்து வருகிறேன். தினமும் மேலப்பாளையம், கொக்கிரகுளம், சந்திப்பு வழியாக டவுனுக்கு சென்று வந்தேன். இந்த நிலையில் நெல்லை சந்திப்பு- நாகர்கோவில் இடையே அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக மேலநத்தம் ரெயில்வே கேட்டில் இருந்து மேலப்பாளையம் ரெயில் நிலையம் வழியாக முன்னீர்பள்ளம் ரெயில்வே மேம்பாலம் வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்டவாளம் அமைக்க மண் சமப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த மண் சாலையை பயன்படுத்தி டவுனுக்கு சென்று வருகிறோம்.
இந்த தற்காலிக சாலையை தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் 5 கிலோ மீட்டர் பயண தூரம் குறைவதுடன் போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் எளிதாக டவுன் பகுதிக்கு சென்று வருகிறோம். ஆனால் இந்த பகுதியில் விரைவில் தண்டவாளம் அமைக்கப்பட உள்ளது. எனவே, இந்த வழியாக செல்லும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வசதியாக ரெயில்வே தண்டவாளத்தையொட்டி புதிய இணைப்பு சாலை அமைத்துக் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன்மூலம் மேலப்பாளையம் வி.எஸ்.டி. பள்ளிவாசல் அருகில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் குறையும்.
குறுகலான சாலை
சுத்தமல்லியை சேர்ந்த இசக்கி பாண்டியன்:-
நான் டைல்ஸ் கடை நடத்தி வருகிறேன். என்னை போன்று கடை வைத்து இருப்பவர்கள், வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, பேட்டை, டவுன், சந்திப்பு வழியாக செல்லும்போது, அந்த சாலை மிகவும் குறுகலாகவும், குண்டும்-குழியுமாக மோசமாகவும் இருப்பதால் சிரமப்பட்டு செல்ல வேண்டி உள்ளது. மேலும் பேட்டையில் ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதாலும், குறித்த நேரத்துக்கு வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை கொண்டு சேர்க்க முடிவது இ்ல்லை. இதனால் அரசு பேட்டையில் இருந்து மாற்றுப்பாதை வழியாக இணைப்பு சாலை அமைத்து மேலப்பாளையம் பகுதிக்கு செல்ல வழிவகை செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இப்பகுதியில் பள்ளி, கல்லூரிகளும் அமைந்து உள்ளன. எனவே இணைப்பு சாலை அமைத்தால் மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என்று அனைத்து தரப்பினரும் பயன்பெறுவர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
---------------
ரூ.370 கோடியில் புறவழிச்சாலை
அமைக்கும் பணி விரைவில் தொடக்கம்
-மாநகராட்சி ஆணையாளர்
நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-
நெல்லை மாநகரில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி நெல்லை மாநகர மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி ரூ.370 கோடி செலவில் விரைவில் தொடங்கப்படுகிறது. 3 கட்டங்களாக இந்த பணி நடைபெற இருக்கிறது. கலெக்டர் விஷ்ணு இதற்கான வழித்தடத்தை நேரில் ஆய்வு செய்து பணிகளை வேகப்படுத்தி வருகிறார். அந்த பணி முடிந்தால் மேற்கு பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.
சாலைகள் விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர புதிய இணைப்பு சாலைகளை உருவாக்குவது தொடர்பாக தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பேட்டை ரெயில்வே கேட்டில் தொடங்கி மேலப்பாளையம் வரையிலும், கண்டியப்பேரி இசக்கி அம்மன் கோவில் முதல் பாறையடி வரையிலும், வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் இருந்து நேருஜி கலையரங்கம் வரையிலும் விரைவில் இணைப்பு சாலைகள் அமைக்கப்படும். மேலும் மேலப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து முன்னீர்பள்ளம் வரை ரெயில்வே தண்டவாளத்தையொட்டி சாலை அமைக்கும் பணி குறித்து ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.