10-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி பலி
திருப்பூரில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 10-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக பலியானான்.
திருப்பூரில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 10-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக பலியானான்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பள்ளி மாணவன்
திருப்பூர் மாவட்டம் பெருமா்நல்லூரை அடுத்த தட்டான்குட்டை பகுதியை சேர்ந்தவர் அப்துல் சுக்கூர். இவருடைய மகன் சமீர் (வயது 15). இவன் பெருமாநல்லூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் சமீர் சிறப்பு வகுப்புக்கு சென்றிருந்தான்.
பின்னர் நேற்று மதியம் சமீர் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து திருப்பூர் பிச்சம்பாளையத்தை அடுத்த சின்ன பொம்ம நாயக்கன்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றான்.
கிணற்றில் மூழ்கி சாவு
அங்கு குளிப்பதற்காக முதலில் சமீர் கிணற்றில் இறங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அவனுக்கு நீச்சல் தெரியாததால் திடீரென தண்ணீரில் மூழ்க தொடங்கினான். இதை கண்ட அவனுடைய நண்பர்கள் இருவரும் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கூச்சல் போட்டார்கள். அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் சமீர் தண்ணீரில் முழுவதுமாக மூழ்கினான்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையம் மற்றும் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய சமீரை தீவிரமாக தேடினார்கள். பல மணி நேரம் தேடிய பின்னர் சமீரை சடலமாகவே மீட்க முடிந்தது. இது பற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சமீரின் பெற்றோர் மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் அனுப்பர்பாளையம் போலீசார் மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் 10-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.