முதல்கட்ட கலந்தாய்வில் 818 மாணவர்கள் சேர்ந்தனர்
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகளில் தரவரிசைப்படி மாணவர்கள் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வில் 818 பேர் சேர்ந்துள்ளனர். 2-வது கட்ட கலந்தாய்வு 25-ந் தேதி நடக்கிறது.
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகளில் தரவரிசைப்படி மாணவர்கள் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வில் 818 பேர் சேர்ந்துள்ளனர். 2-வது கட்ட கலந்தாய்வு 25-ந் தேதி நடக்கிறது.
அரசு கலைக்கல்லூரியில் முதல் கட்ட கலந்தாய்வு
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 14 இளநிலை பட்டப்படிப்புகளும், 10 முது நிலை பட்டப்படிப்புகளும் உள்ளன. இதில் 2022-2023-ம் கல்வியாண்டிற்கு இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி நடைபெற்று வருகிறது.
இந்த கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளில் மொத்தம் 864 இடங்கள் உள்ளன. முதல்கட்ட கலந்தாய்வில் சிறப்பு பிரிவில் (மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவர்படை, விளையாட்டுத்துறை) 18 மாணவர்கள் சேர்ந்தனர்.
தரவரிசைப்படி கலந்தாய்வு
இதைத்தொடர்ந்து தரவரிசைப்படி பொதுப்பிரிவு மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கு கடந்த 10-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை கலந்தாய்வு நடந்தது. நேற்று முன்தினம் நடந்த கலந்தாய்வில் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் எண் 2,601 முதல் 3,000 வரையிலான இடங்களைப் பெற்றிருந்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில் இயற்பியல் பாடப்பிரிவில் 2 மாணவர்களும், வேதியியல் பாடப்பிரிவில் ஒரு மாணவரும், தாவரவியல் பாடப்பிரிவில் ஒரு மாணவரும், கணிதவியல் பாடப்பிரிவில் 10 மாணவர்களும், கணினி அறிவியல் பாடப்பிரிவில் ஒரு மாணவரும், புள்ளியியல் பாடப்பிரிவில் 2 மாணவர்களும், பி.காம் (சி.ஏ) பாடப்பிரிவில் 2 மாணவர்களும், தமிழ் இலக்கிய பாடப்பிரிவில் 54 மாணவர்களும், ஆங்கில இலக்கிய பாடப்பிரிவில் 55 மாணவர்களும் என மொத்தம் 128 மாணவ-மாணவிகள் சேர்ந்தனர்.
அவர்கள் கல்லூரியில் சேர்வதற்கான அனுமதி சான்றை அந்தந்த மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் சோ.கி.கல்யாணி வழங்கினார். நேற்று முன்தினத்துடன் முதல் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்தது. இதுவரை 818 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
25-ந் தேதி 2-ம் கட்ட கலந்தாய்வு
முதல் கட்ட கலந்தாய்வில் பெரும்பான்மையான இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில் இளநிலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு வருகிற 25-ந் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்த விவரங்களை கல்லூரியின் இணையதளத்திலும் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று கல்லூரி முதல்வர் சோ.கி.கல்யாணி தெரிவித்துள்ளார்.