அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீரை அகற்றக்கோரி பள்ளி மாணவ-மாணவிகள் மறியல்
ஊத்துக்குளி அருகே நடுப்பட்டி ஊராட்சி சரவணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீரை அகற்றக்கோரி பள்ளி மாணவ-மாணவிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
ஊத்துக்குளி அருகே நடுப்பட்டி ஊராட்சி சரவணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீரை அகற்றக்கோரி பள்ளி மாணவ-மாணவிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
அரசு மேல்நிலைப்பள்ளி
திருப்பூர் அருகே ஊத்துக்குளி ஒன்றியம், நடுப்பட்டி ஊராட்சி சரவணபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட இந்தப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 15 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இப்பள்ளி வளாகம் தாழ்வாக இருப்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் மாணவ, மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சாலை மறியல் போராட்டம்
இந்த நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் அதிக அளவு மழைநீர் பள்ளி வளாகத்தில் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் வகுப்பறைக்கு நடந்து செல்லும் மாணவ-மாணவிகள் வழுக்கி விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் மழைநீருடன் சாக்கடை நீர் கலந்து பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்திஆகி பல்வேறு நோய்கள் பரவும் இடமாகவும் இப்பள்ளி வளாகம் மாறி வருகிறது.
இதைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தை சீரமைக்கக்கோரி மாணவ-மாணவிகள் நேற்று காலை பல்லகவுண்டம்பாளையம் பஸ் நிறுத்த பகுதிக்கு திரண்டு வந்தனர். பின்னர் நால்ரோடு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி வளாகத்தை மேம்படுத்தி சீரமைக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
ஊத்துக்குளி அருகே நடுப்பட்டி ஊராட்சி சரவணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீரை அகற்றக்கோரி பள்ளி மாணவ-மாணவிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
தகவல் அறிந்த ஊத்துக்குளி போலீசார், தாசில்தார், ஊராட்சி நிர்வாகத்தினர், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். உடனடியாக பள்ளி வளாகத்தில் தாழ்வான பகுதிகளில் மண் கொட்டி மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் உறுதியளித்தது.
இதையடுத்து பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு திரும்பிச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.