ஆசிரியை திட்டியதாக கூறி அவினாசி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த பள்ளி மாணவர்களால் பரபரப்பு
வீட்டுப்பாடம் எழுதாததால் ஆசிரியை திட்டியதாக கூறி அவினாசி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த பள்ளி மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
வீட்டுப்பாடம் எழுதாததால் ஆசிரியை திட்டியதாக கூறி அவினாசி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த பள்ளி மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர்கள்
திருப்பூர் மாவட்டம் அவினாசி ராஜன் நகர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 256 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் பள்ளி செயல்பட்டு மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது அந்த பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் 4 மாணவர்கள் அவினாசி போலீஸ் நிலையம் வந்தனர்.
அவர்களிடம் போலீசார் எதற்காக போலீஸ் நிலையம் வந்தீர்கள் என கேட்டனர். அதற்கு மாணவர்கள் 'எங்களை ஒரு ஆசிரியை திட்டுகிறார். இது குறித்து மற்றொரு ஆசிரியரிடம் கூறினோம். அவரும் ஆசிரியை திட்டாமல் இருக்கணும்னா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுங்கடா? என்று கூறினார். அதனால் இங்கு புகார் கொடுக்க வந்துள்ளோம்' என்று தெரிவித்துள்ளனர்.
பரபரப்பு
இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவர்கள் வீட்டுப்பாடம் எழுதாமல் வந்ததால் ஆசிரியை மாணவர்களிடம், இனிமேல் ஒழுங்காக வீட்டுப்பாடம் எழுதி வரவேண்டும் என்று எச்சரித்தாக கூறப்படுகிறது. இதை மாணவர்கள் மற்றொரு ஆசிரியரிடம் கூறியபோது அவர் விளையாட்டாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுங்கடா என்று கூறியதால், மாணவர்கள் போலீஸ் நிலையம் வந்தது தெரியவந்தது.
இதையடுத்து மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து மாணவர்களை கவனமாக பார்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தி மாணவர்களை பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர்.
பள்ளி மாணவர்கள் புகார் கொடுக்க போலீஸ் நிலையம் வந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.