துப்பாக்கி சுடும் போட்டியில் அரசு பள்ளி மாணவன் சாதனை
தர்மபுரியில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் அரசு பள்ளி மாணவன் சாதனை படைத்தார்.
தர்மபுரி:
மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி தர்மபுரி கமலம் பள்ளியில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் அதியமான்கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவன் கார்த்திக் மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் 3-ம் இடமும் பிடித்து சாதனை படைத்தார். இதன் மூலம் இந்த மாணவன் வருகிற ஆகஸ்டு மாதம் நேபாளத்தில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தர்மபுரி மாவட்ட கல்வித்துறை சார்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இந்த சாதனை படைத்த மாணவனை பள்ளி தலைமை ஆசிரியர் சென்றாயன், உதவி தலைமை ஆசிரியர் அசோக்குமார், தமிழாசிரியர் ஜெயவேல், தேசிய பசுமை படை பொறுப்பாசிரியர் கண்ணன், ஆசிரியர்கள் பழனிசாமி, செல்வம் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியை கோவிந்தம்மாள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இந்த மாணவனின் தந்தை முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.