நீட் தேர்வில் தோல்வியால் மாணவி தற்கொலை


நீட் தேர்வில் தோல்வியால் மாணவி தற்கொலை
x

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் சென்னையில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார். மேலும் தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் குறைந்து இருக்கிறது.

ஆவடி,

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

நீட் தேர்வால் மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

தேர்வு முடிவு

நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியானது.

தேர்வு முடிவு வெளியான சில மணி நேரத்திலேயே நீட் தேர்வில் தோல்வி அடைந்த திருமுல்லைவாயலை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியையின் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் மீண்டும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதன் விவரம் வருமாறு:-

ஆசிரியையின் மகள்

சென்னையை அடுத்த ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயல் சோழபுரம் இந்திரா நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் அமுதா (வயது 47). இவர், ஆவடியை அடுத்த பாண்டேஸ்வரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவர், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து தனது ஒரே மகள் லக்சனா சுவேதா (19) உடன் வசித்து வந்தார். லக்சனா சுவேதா அம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்தார். அவர் டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்டார்.

இதற்காக கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி, அதில் தோல்வி அடைந்தார். இதற்கிடையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவம் தொடர்பான படிப்பை ஆன்லைனில் 1½ ஆண்டுகள் படித்து வந்தார்.

2-வது முறையாக

எப்படியாவது டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்த லக்சனா சுவேதா, 2-வது முறையாக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வை எழுதினார். தேர்வுக்கு பிறகு அவர் தனது தாயாரிடம் "நான் தேர்வை சரியாக எழுதவில்லை. மதிப்பெண்கள் குறைவாகத்தான் வரும் போல் இருக்கிறது" என்று கூறினார்.

அதற்கு அமுதா, "சரியாக எழுதவில்லை என்றாலும் பரவாயில்லை. அடுத்து எழுதிக்கொள்ளலாம்" என்று மகளுக்கு ஆறுதல் கூறினார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நீட் தேர்வு முடிவு வெளியானது. மாலையில் இருந்தே நீட் தேர்வு முடிவு எப்படி இருக்குமோ? என பரிதவித்து வந்த லக்சனா சுவேதா, தனது தாயாருடன் நீட் தேர்வு முடிவுக்காக வீட்டில் காத்திருந்தார். இரவு 11.30 மணியளவில் அமுதா தூங்க சென்றுவிட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்தநிலையில் நள்ளிரவு 1.30 மணி அளவில் நீட் தேர்வு முடிவு வெளியானது. அதில் லக்சனா சுவேதா மீண்டும் தோல்வி அடைந்துவிட்டார். 2-வது முறையும் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தன்னால் டாக்டருக்கு படிக்க முடியாதே என விரக்தி அடைந்த லக்சனா ஸ்வேதா, திடீரென வீட்டின் ஹாலில் இருந்த மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று அதிகாலை 3.30 மணியளவில் எழுந்த அமுதா, தனது மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மகளின் உடலை பார்த்து அமுதா கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

தொடரும் சோகம்

இதுபற்றி திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தும் நீட் தேர்வு காரணமாக அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது நீட் தேர்வில் 2-வது முறையும் தோல்வி அடைந்ததால் மாணவி தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையே பிரேத பரிசோதனைக்கு பிறகு மாணவியின் உடல் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது. லக்சனா சுவேதாவின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மாலையில் மாணவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

மற்றொரு மாணவி தற்கொலை முயற்சி

நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் இன்னொரு மாணவி திராவகம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த வேலஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல். இவரது மகள் ஜெனி என்ற ஜெயசுதா (18). இவர் கடந்த 2021-22-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்தார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நீட் தேர்வுக்காக திருப்பதியில் உள்ள தனியார் மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று ஆவடியில் தேர்வு எழுதினார்.

நேற்று முன்தினம் தேர்வு முடிவு வெளியானதில் ஜெயசுதா குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இதனால் மாணவி ஜெயசுதா மனமுடைந்து காணப்பட்டார். பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேசாமல் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்த கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திராவகத்தை எடுத்து அவர் குடித்து விட்டார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்த ஜெயசுதாவை அவரது தாயார் லதா மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.

வழக்கு

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை திருத்தணி ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று மாணவியின் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் விசாரித்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேர்ச்சி விகிதம் குறைவு

நாடு முழுவதும் 17 லட்சத்து 64 ஆயிரத்து 571 பேர் நீட் தேர்வு எழுதியதில், 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் ஓ.பி.சி. பிரிவில் 4 லட்சத்து 47 ஆயிரத்து 753 பேரும், எஸ்.சி. பிரிவில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 767 பேரும், எஸ்.டி. பிரிவில் 47 ஆயிரத்து 295 பேரும், பொதுப்பிரிவில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 184 பேரும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரில் 84 ஆயிரத்து 70 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டுகளுடன் தேர்ச்சி சதவீதத்தை ஒப்பிடுகையில், ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளதை பார்க்க முடிகிறது. கடந்த 2018-ம் ஆண்டு 56.27 சதவீதம் தேர்ச்சி இருந்த நிலையில், அதற்கு அடுத்த ஆண்டு (2019) 56.50 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டுகளில் சதவீதம் குறைந்து கொண்டே வருவதைத் தான் பார்க்க முடிகிறது. அதன்படி, முறையே 56.44 சதவீதம் (2020), 56.34 சதவீதம் (2021) என இந்த ஆண்டு 56.27 சதவீதமாக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்தங்கிய தமிழகம்

தமிழகத்திலும் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருவதை புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரியவந்து இருக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டு 39.56 சதவீதமாக இருந்த நிலையில், 2019-ம் ஆண்டு 48.57 சதவீதமாகவும், 2020-ம் ஆண்டு 57.44 சதவீதமாகவும் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து இருந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு (2021) 54.4 சதவீதமாக குறைந்து, இந்த ஆண்டு மேலும் சரிந்து, 51.3 சதவீதம் தேர்ச்சி விகிதத்தை கொண்டு இருக்கிறது.

தேர்ச்சி சதவீதத்தில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பட்டியலில், டெல்லி (75.9 சதவீதம்) முதலிடத்திலும், அதற்கு அடுத்த இடங்களை முறையே சத்தீஸ்கர் (72.65 சதவீதம்), ராஜஸ்தான் (70.49 சதவீதம்), அரியானா (68.62 சதவீதம்), பஞ்சாப் (67.68 சதவீதம்) மாநிலங்கள் பெற்றிருக்கின்றன.

இந்த பட்டியலில் தமிழகத்துக்கு 29-வது இடம் கிடைத்து இருக்கிறது. மொத்தம் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 167 மாணவ-மாணவிகள் தேர்வை எழுதிய நிலையில், 67 ஆயிரத்து 787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 51.28 ஆகும். கடந்த 2020-ம் ஆண்டில் 15-வது இடத்திலும் (57.44 சதவீதம்), 2021-ம் ஆண்டு 23-வது இடத்திலும் (54.4 சதவீதம்) இருந்து, தற்போது 29-வது இடத்துக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் நீட் தேர்வு முடிவு தேர்ச்சியில் தமிழகம் பின்தங்கி இருப்பதை பார்க்க முடிகிறது.

அரசு பள்ளி மாணவர்கள் எவ்வளவு பேர் தேர்ச்சி?

நீட் தேர்வு முடிவு வெளியாகி இருக்கும் நிலையில், தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) தேர்வு எழுதிய தேர்வர்களின் புள்ளி விவரங்கள் அனைத்தையும் வெளியிட்டு இருக்கிறது. நீட் தேர்வுக்கு ஆரம்பத்தில் இருந்தே தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கிறது என்ற எதிர்ப்புக்கு மத்தியிலும், நீட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அரசால் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதுவதற்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 17 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்ததாக கூறப்பட்டது. இதில் பெரும்பாலான மாணவ-மாணவிகள் தோல்வியை தழுவி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான புள்ளி விவரங்களை பள்ளிக்கல்வித்துறையிடம் கேட்டபோது, 'அப்படி புள்ளி விவரங்கள் இதுவரை தயாராகவில்லை' என்ற அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தனர்.

2018-ம் ஆண்டு முதல் நீட் தேர்வை எதிர்கொண்ட அரசு பள்ளி மாணவர்களின் புள்ளி விவரங்களை பார்க்கையில், முறையே 22.06 சதவீதம், 13.46 சதவீதம், 25.83 சதவீதம், 24.27 சதவீதம் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருந்தனர். அதன்படி, இந்த ஆண்டும் 20 முதல் 30 சதவீதம் வரையில்தான் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்ச்சி சதவீதம் குறைந்திருந்தாலும், தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.


Next Story