'நீட்' தேர்வு தோல்வி பயத்தில் மாணவி தற்கொலை
‘நீட்’ தேர்வு தோல்வி பயத்தில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி,
தென்காசி மாவட்டம் குலசேகரமங்கலத்தை சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது 54), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி வெண்ணியார் (48). இவர்களுக்கு ராஜலட்சுமி (21) என்ற மகளும், உதயஜோதி (19) என்ற மகனும் உண்டு.
ராஜலட்சுமி பிளஸ்-2 படித்து விட்டு, மருத்துவ படிப்பில் சேருவதற்காக கடந்த 2 ஆண்டுகளாக 'நீட்' தேர்வு எழுதினார். இதில் அவர் தோல்வி அடைந்ததால், சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து 3-வது முறையாக மீண்டும் நீட் தேர்வு எழுதினார்.
மருத்துவ கனவு சிதைந்ததாக வேதனை
இந்த நிலையில் 'நீட்' தேர்வு முடிவுகள் வருகிற 7-ந்தேதி வெளியாக உள்ளன. இதையொட்டி நீட் தேர்வுக்கான விடைகளும் இணையதளத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியானது.
இதையடுத்து 'நீட்' தேர்வுக்கான விடைகளை ராஜலட்சுமி இணையதளத்தில் பார்த்தார். பின்னர் அவர், தேர்வில் தோல்வி அடைந்து விடுவேன் என்றும், தனது மருத்துவ கனவு சிதைந்து போனதாகவும் குடும்பத்தினரிடம் கூறி வேதனை அடைந்தார். இதையடுத்து ராஜலட்சுமியை பெற்றோர் சமாதானப்படுத்தினர்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் நேற்று மதியம் ராஜலட்சுமியின் பெற்றோர் வழக்கம்போல் அப்பகுதியில் உள்ள வயலுக்கு சென்றனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த ராஜலட்சுமி திடீரென்று தாயாரின் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.