மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை
வேலூர் அருகே மதிப்பெண் குறைந்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ்-2 மாணவி
வேலூர் அருகே துத்திப்பட்டு பஜனைகோவில் தெருவை சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது 48). டெய்லர். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஸ்ரீநித்யா (18) என்ற மகளும் உண்டு. ஸ்ரீநித்யா இடையன்சாத்து பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது. இதில் ஸ்ரீநித்யா வெற்றிபெற்றும் குறைவான மதிப்பெண்களே எடுத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் விரக்தியடைந்து காணப்பட்டுள்ளார். மேற்படிப்புக்கு இடம் கிடைக்குமா? என்றும் அவர் கவலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் தூக்குப்போட்டுள்ளார். இதைப்பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதுகுறித்து வேலூர் பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.