சென்னையில் 'நீட்' தேர்வு பயத்தால் மாணவர் தற்கொலை
‘நீட்’ தேர்வின் பயம் காரணமாக சென்னையில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ‘சாதிக்க முடியவில்லை’ என உருக்கமான வீடியோவையும் பதிவு செய்து வைத்திருந்தார்.
சென்னை,
சென்னை சூளைமேடு சுப்பாராவ் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் (வயது 42). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு கரண்ராஜ், தனுஷ் (18) என 2 மகன்கள் இருந்தனர்.
இந்தநிலையில் தனுஷ் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தார். தாயார் ஜெயந்தி வேலைக்கு சென்றுவிட்டு மாலை திரும்பி வந்தபோது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். உள்ளே தனுஷ் வீட்டின் படுக்கை அறையின் மேற்கூரையில் பெல்டால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கதறி அழுதார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
'நீட்' தேர்வு
தகவல் அறிந்த சூளைமேடு போலீசார், தனுஷின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், கடந்த 2020-ம் ஆண்டு எம்.எம்.டி.ஏ அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 முடித்த தனுஷ் டாக்டராக வேண்டும் என நினைத்து 'நீட்' தேர்வு எழுதியதாகவும், ஆனால் தேர்வில் தேர்ச்சி பெறாத நிலையில் மீண்டும் 'நீட்' தேர்வுக்கான பயிற்சியை வீட்டில் இருந்தபடியே படித்து வந்ததாகவும், தன்னால் படிப்பில் சரியான பாதையை தேர்ந்தெடுத்து செல்ல முடியவில்லை என்ற மனகுழப்பத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்தது.
சாதிக்க முடியவில்லை
இதற்கிடையே தற்கொலை செய்து கொண்ட தனுஷ், தற்கொலைக்கு சிறிது நேரத்துக்கு முன்பு பெற்றோருக்காக உருக்கமான வீடியோ ஒன்றையும் பதிவு செய்து வைத்திருந்தார்.
அந்த வீடியோவில், ''என்னால் படிக்க முடியும், ஜெயிக்க முடியும் என நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் என்னால் எதிலையும் ஜெயிக்கவும் முடியவில்லை. சாதிக்கவும் முடியவில்லை. என்னால் முழு கவனத்துடன் ஈடுபட முடியவில்லை.
என் சாவுக்கு யாரும் காரணமில்லை. எனக்கு என்ன வரும் என்று தெரியாமல் எனக்குள் ஒரு பொய்யான அறிவை வளர்த்துக்கொண்டேன். அதுதான் என் தவறு. என் எதிர்காலத்தை எவ்வாறு தேர்வு செய்வது என்பது கூட தெரியாத ஆளாக நிற்கிறேன். என் மூளை குழம்பி போய் மன அழுத்தத்தில் இருக்கிறேன்.'' என்று கூறியிருந்தார்.
மனஅழுத்தம்
இது குறித்து தனுஷின் சகோதரர் கரண்ராஜ் நிருபர்களிடம், ''தனுஷ் பிளஸ்-2 முடித்து விட்டு நீட் தேர்வு எழுதினார். அதில் 159 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றும், அவருக்கு அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் அடுத்த நீட் தேர்வுக்காக தன்னை தயார் செய்து கொண்டிருந்தார். ஆனால் இதற்கிடையே மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்'' என தெரிவித்தார்.