தலைவாசல் அருகே தனியார் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை
தலைவாசல் அருகே தனியார் கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தலைவாசல்:
கல்லூரி மாணவி
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராபாளையம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் கோபிகா (வயது 18). இவர், தலைவாசல் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி, படித்து வந்த மாணவி கோபிகா நேற்று இரவு தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சாவு
ஆனால் அங்கு சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி மாணவி கோபிகா இறந்துவிட்டார். தலைவாசல் போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அவர் விடுதியில் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவிகள் மயக்கம்
இதனிடையே மாணவி கோபிகா இறந்த தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் 3 பேர் விடுதியில் மயக்கம் அடைந்தனர். பின்னர் அவர்கள் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.