தடுப்பு சுவரில் மோதி கார் கவிழ்ந்தது: கல்லூரி மாணவர் பரிதாப சாவு-போலீசார் விசாரணை
அரூர்:
அரூர் அருகே தடுப்பு சுவரில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி மாணவர்
தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் பாபு. இவருடைய மகன் இம்ரான் (வயது 19). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இம்ரான் நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக தனது காரில் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அரூர் அருகே கொக்கராப்பட்டி பிரிவு சாலையில் முன்னால் சென்ற லாரியை இம்ரான் முந்த முயன்றார். அப்போது சாலையில் இருந்த தடுப்பு சுவரில் கார் மோதி, தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி இம்ரான் படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக இம்ரான் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இம்ரான் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோபிநாதம்பட்டி போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான இம்ரான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடுப்பு சுவரில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் தனியார் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.