திருவோணம் அருகே, ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு: தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட தம்பி பிணமாக மீட்பு
திருவோணம் அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் இறந்த நிலையில், ஆற்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட அவருடைய தம்பியும் பிணமாக மீட்கப்பட்டார்.
திருவோணம் அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் இறந்த நிலையில், ஆற்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட அவருடைய தம்பியும் பிணமாக மீட்கப்பட்டார்.
அண்ணன்- தம்பி
திருச்சி தாராநல்லூர் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவருடைய மகன்கள் தினேஷ் (வயது21), ராஜேஷ் (18). தினேஷ் பிளஸ்-2 படித்துவிட்டு சிலம்பு பயிற்சி நடத்தி வந்தார். ராஜேஷ் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார்.
இவர்கள் இருவரும் உறவினர் வீட்டு திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் தஞ்சை மாவட்டம் ஊரணிபுரத்துக்கு வந்திருந்தனர்.
சுழலில் சிக்கினர்
நேற்று முன்தினம் மதியம் 1.30 மணி அளவில் ஊரணிபுரத்தில் இருந்து உஞ்சியவிடுதிக்கு செல்லும் சாலையில் உள்ள கல்லணை கால்வாய் (புதுஆறு) சைபன் பாலம் பகுதிக்கு அண்ணனும், தம்பியும் குளிக்க சென்றனர். தினேஷ், ராஜேஷ் ஆகியோருடன் அவர்களுடைய பெரியம்மா மகன்கள் திருக்குமரன், திருமாறன் ஆகியோரும் சென்றிருந்தனர்.
தினேஷ், ராஜேஷ், திருமாறன் ஆகிய 3 பேரும் ஒரே நேரத்தில் ஆற்றில் இறங்கி குளித்தனர். திருக்குமரன் மட்டும் கரையில் காத்திருந்தார். அப்போது குளித்து கொண்டிருந்த தினேஷ், ராஜேஷ், திருமாறன் ஆகிய 3 பேரும் ஆற்று சுழலில் சிக்கினர். திருமாறன் அவருடைய அண்ணன் திருக்குமரன் உதவியுடன் மீட்கப்பட்டார்.
ஆனால் தினேசும், அவருடைய தம்பி ராஜேசும் ஆற்று தண்ணீரில் மூழ்கினர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கறம்பக்குடி தீயணைப்பு படையினர் ஆற்றில் இறங்கி தினேசை பிணமாக மீட்டனர்.
தம்பியும் சடலமாக மீட்பு
மேலும் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ராஜேசை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் நேற்று காலை ராஜேஷ் அலிவலம் பிரிவு வாய்க்காலில் இறந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ், ராஜேஷ் ஆகிய இருவருடைய உடல்களையும் ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
ஆற்றுக்கு குளிக்க சென்றபோது சுழலில் சிக்கி அண்ணனும், தம்பியும் பலியான சம்பவம் அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.