குட்டையில் தவறி விழுந்து பள்ளி மாணவி சாவு
ராயக்கோட்டை அருகே குட்டையில் தவறி விழுந்து பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே குட்டையில் தவறி விழுந்து பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்.
பள்ளி மாணவி
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள அளேசீபம் கிராமத்தை சேர்ந்தவர் சிவசங்கர். விவசாயி. இவரது மகள் நைனாஸ்ரீ (வயது 10). சிறுமி அங்கு உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் சிறுமி அதேபகுதியை சேர்ந்த குழந்தைகளுடன் விளையாட சென்றாள்.
சிறுமிகள் அனைவரும் அதேபகுதியை சேர்ந்த குமார் என்பவரது நிலத்தில் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது அங்குள்ள குட்டையில் மாணவி நைனாஸ்ரீ தவறி விழுந்தாள். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற சிறுமிகள் ஊருக்கு வந்து நைனாஸ்ரீயின் பெற்றோர் மற்றும் பொதுமக்களிடம் தெரிவித்தனர்.
குட்டையில் மூழ்கி சாவு
இதையடுத்து அவர்கள் குட்டைக்கு விரைந்து சென்று மாணவியை மீட்க முயன்றனர். அதற்குள் மாணவி குட்டையில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டாள். இதுதொடர்பாக உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
அப்போது அங்கிருந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கதறி அழுதனர். பின்னர் போலீசார், மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். குட்டையில் தவறி விழுந்து பள்ளி மாணவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.