கல்குவாரி குட்டையில் மூழ்கி மாணவர் பலி
திண்டுக்கல் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.
9-ம் வகுப்பு மாணவர்
திண்டுக்கல் பிள்ளையார்பாளையத்தை சேர்ந்தவர் வேல்முருகன். ஆட்டோ டிரைவர். இவரது மகன் வருண் (வயது 15). இவர், திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 29-ந்தேதி வீட்டை விட்டு சைக்கிளில் வெளியே சென்ற வருண் நீண்டநேரம் ஆகியும் இரவில் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தும் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
சைக்கிள்
இந்தநிலையில் திண்டுக்கல்லை அடுத்த நந்தவனப்பட்டி அருகே உள்ள கல்குவாரி குட்டை அருகே வருணின் சைக்கிள் நின்றது. இதனால் குளிக்க சென்ற வருண் குட்டையில் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். இதேபோல் திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் கல்குவாரி குட்டையில் வருணை தேடினர். இரவு நேரமானதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.
குட்டையில் மூழ்கி பலி
இந்தநிலையில் நேற்று அந்த கல்குவாரி குட்டையில் வருண் உடல் மிதந்தது. இதுகுறித்த தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் வருணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குட்டையில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி மாணவர் பலியாகி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. இதுபோன்ற உயிரிழப்பை தடுக்க, திறந்த நிலையில் உள்ள நீர்நிலைகளில் வேலி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.