மரிங்கிப்பட்டி அரசு பள்ளியில் மாணவர் தேர்தல்


மரிங்கிப்பட்டி அரசு பள்ளியில் மாணவர் தேர்தல்
x

அன்னவாசல் அருகே உள்ள மரிங்கிப்பட்டி அரசு பள்ளியில் மாணவர் தேர்தல் நடைபெற்றது. இதில் மாணவர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

புதுக்கோட்டை

மாணவர்கள் தேர்தல்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள மரிங்கிப்பட்டி அரசு ஆரம்பப்பள்ளியில் 2022-2023-ம் ஆண்டுக்கான மாணவர் தேர்தல் நடைபெற்றது. இப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். தலைமை ஆசிரியர் நாகலட்சுமி முன்னிலையில் நடைபெற்ற இத்தேர்தலுக்கு காட்டுப்பட்டி அரசுப்பள்ளியின் ஆசிரியர் சின்னக்கண்ணு தேர்தல் பார்வையாளராக கலந்து கொண்டார்.

இத்தேர்தலில் 4-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்கள் 19 பேர் வேட்பாளர்களாக களத்தில் இறங்கினர். மாணவர்கள்ஆர்வமுடன் வரிசையாக நின்று தங்களுக்கு பிடித்த வேட்பாளருக்கு வாக்களித்தனர். அதிக வாக்குகள் பெற்ற மாணவர்களுக்கு முதன்மை அமைச்சர்கள் பொறுப்பும், குறைவான வாக்குகள் பெற்ற மாணவர்களுக்கு இணை அமைச்சர் பொறுப்புகளும் வழங்கப்பட்டன.

அமைச்சர்களாக பொறுப்பேற்பு

அதனடிப்படையில் உள்துறை அமைச்சராக மோகனா, வெளித்துறை அமைச்சராக சூரியபிரகாஷ், மதிய உணவுத்துறை அமைச்சராக கங்காதரன், வரவேற்பு துறை அமைச்சராக பிரசன்னாதேவி, புலனாய்வு மற்றும் கண்காணிப்பு துறை அமைச்சராக கமலேஷ், அறிவகம் பயன்பாட்டுதுறை அமைச்சராக சிவபிரசாத், மரம் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சராக பிரகாஷ் என 7 முதன்மை அமைச்சர்களும் தரணீதரன், கோகுல், அழகுராகவன், அபிஷேக், அஸ்வின், மணிகண்டன், அழகுமணி, அகல்யா, ரித்திஷ்குமார், மோடிதரன், மகேந்திரன் மற்றும் ரஞ்சித் என 12 மாணவர்கள் இணை அமைச்சர்களாகவும் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர்.

அரசியல், ஆளுமை, தலைமைப்பண்பு

மாணவர் தேர்தல் பற்றி ஆசிரியர் திருப்பதி கூறுகையில், நான் ஆசிரியராக பணியேற்ற காலத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில் மாணவர் தேர்தலை சிறப்பாக நடத்தி வருகின்றேன். புதிய கல்வியாண்டின் தொடக்கத்திலேயே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு முறையாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறுகிறது.

மாணவர்களிடம் அரசியல் ஆளுமை தலைமைப்பண்பு வளர வேண்டும். சகோதரத்துவம் சமத்துவம் நிலையாட்டுவதற்கு இதுபோன்ற மாணவர் தேர்தல் அவசியமாகிறது. மேலும் அரசியல்‌ விழிப்புணர்வினை ஆரம்ப கல்வியிலேயே ஏற்படுத்துவதன் மூலம் நல்லொழுக்கம் வளர்கிறது என்றார்.


Next Story