மாணவர் சேர்க்கை அதிகமாச்சு...!கூடுதல் வகுப்பறைகள் கட்டி கொடுக்கலாமே...!
விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி பள்ளியில் மாணவா்கள் மரத்தடியில் கல்வி கற்பதால் பெற்றோர் வேதனை அடைந்துள்ளனா்.
கொரோனா காலக்கட்டத்தில் தனியார் பள்ளிகளில் படித்து வந்த மாணவ- மாணவிகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த அவர்களது பெற்றோர், தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தனர். இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தது. அந்த வகையில் விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி பள்ளியிலும், கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மாணவர் சேர்க்கை அதிகரித்தது.
1140 பேருக்கு 15 வகுப்பறைகள்
விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியில் நகராட்சி உயர்நிலைப்பள்ளியும், தொடக்கப்பள்ளியும் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நகரம் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். தொடக்கப்பள்ளியில் 5 வகுப்பறைகளும், உயர்நிலைப்பள்ளியில் 10 வகுப்பறைகளும் உள்ளன. இதில் உயர்நிலைப்பள்ளியில் 744 மாணவ- மாணவிகளும், தொடக்கப்பள்ளியில் 396 மாணவ- மாணவிகளும் படித்து வருகின்றனர்.
தற்போது இப்பள்ளியில் உள்ள மாணவ- மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உயர்நிலைப்பள்ளிக்கு ஒரு வகுப்பறைக்கு 40 மாணவர்கள் வீதம் என்ற கணக்கீட்டின் அடிப்படையில் 18 வகுப்பறைகள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது இருப்பதோ 10 வகுப்பறைகள்தான். அதுபோல் தொடக்கப்பள்ளிக்கு 8 வகுப்பறைகள் இருக்க வேண்டிய நிலையில் வெறும் 5 வகுப்பறைகளே இருக்கிறது. மொத்தம் 26 வகுப்பறைகள், இப்பள்ளியில் இருக்க வேண்டும். ஆனால் 15 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன.
மரத்தடியில் மாணவர்கள்
போதுமான வகுப்பறை இல்லாததால் தொடக்க, உயர்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் வகுப்பறைக்கு வெளியே வளாகத்திலும், மரத்தடி நிழலிலும் அமர வைக்கப்பட்டு பாடம் கற்பிக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மழைக்காலத்தில் இப்பள்ளியின் நிலைமை பரிதாபமான நிலைக்கு தள்ளப்படுகிறது. அந்த சமயத்தில் ஒரு வகுப்பறையில் 70 முதல் 80 மாணவ- மாணவிகளை அமர வைத்து பாடம் நடத்தும் சூழ்நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்படுகின்றனர்.
அதுமட்டுமின்றி மாணவ- மாணவிகள் சிலர், பெஞ்சில் அமர்ந்து பாடம் படிப்பதும், சிலர் தரையில் அமர்ந்தும் படிப்பதால் அவர்களிடையே ஏற்றத்தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுகிறது.
பெற்றோர்கள் அதிருப்தி
இது பெற்றோர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இப்பள்ளியின் வளாகத்தில் போதிய இடவசதி இருக்கிறபோதிலும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை கட்ட சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை வசதி கேட்டு பலமுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை மனு கொடுத்தும் இதுநாள் வரையிலும் யாரும் செவிசாய்க்கவில்லை என்று பெற்றோர்கள் வேதனையுடன் கூறுகிறார்கள். மாணவர்களின் பெற்றோர் கூறிய கருத்துகள் இதோ...
வேதனையாக இருக்கிறது
விழுப்புரம் சவுந்தர்ராஜன்:- இந்த பள்ளியில் சிறப்பான முறையில் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தாலும் இங்கு மாணவர்களுக்கான போதிய அடிப்படை வசதி இல்லை. எங்கள் பிள்ளைகளை பள்ளி வளாகத்திலும், மரத்தடி நிழலிலும் அமர வைத்து பாடம் நடத்துவதை பார்க்கையில் எங்களுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசு பள்ளியை நம்பித்தான் உள்ளோம். எனவே உடனடியாக இப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை வசதியை ஏற்படுத்திக்கொடுப்பது அரசின் கடமை. அதை விரைந்து செய்தால் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நோய் பரவும் அச்சம்
மருதூர் ராமு:- இப்பள்ளியில் எந்தவொரு அடிப்படை வசதிகளுமே இல்லை. குடிநீர் குழாய் இணைப்பு வசதிகள் இருந்தும் அவை உடைந்து மாணவர்களுக்கு பயன்பாடின்றி இருக்கிறது. அதுபோல் கழிவறையும் சுகாதாரமாக இல்லை. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால் மாணவர்களுக்கு நோய் பரவும் அச்சம் உள்ளது. ஒவ்வொரு பருவமழைக்காலங்களின் போதும் பள்ளி வளாகம் முழுவதும் தண்ணீர் குளம்போல் தேங்கி விடுவதால் அந்த சமயத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே தயக்கமாக இருக்கிறது. போதிய வகுப்பறை வசதியும் கிடையாது. ஆகவே மாணவ- மாணவிகளின் நலனை கருத்தில்கொண்டு அனைத்து அடிப்படை வசதிகளையும் சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அதேநேரத்தில் இப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை கட்டிக்கொடுக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதோடு பள்ளிக்கு காவலாளியையும் நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கூடுதல் வகுப்பறை தேவை
எனவே மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் இப்பள்ளியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து கூடுதல் வகுப்பறை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் மழைக்காலங்களில் இப்பள்ளி வளாகத்தில் குளம்போல் மழைநீர் தேங்காமல் இருக்கும் வகையில் பள்ளி வளாகத்தை மேடாக தூக்கி பைப்லைன் போட்டு மழைநீரை அருகில் உள்ள பூந்தோட்டம் குளத்திற்கு செல்லும் வகையில் வழிவகை செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்....