கருப்பு சட்டை அணிந்து பட்டம் பெற வந்த இந்திய மாணவர் சங்க நிர்வாகி வெளியேற்றம்
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கருப்பு சட்டைஅணிந்து பங்கேற்ற மாணவர் சங்க நிர்வாகியை போலீசார் வெளியேற்றினர். இதேபோல் மற்றொரு நிர்வாகியையும் போலீசார் அழைத்துச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கருப்பு சட்டைஅணிந்து பங்கேற்ற மாணவர் சங்க நிர்வாகியை போலீசார் வெளியேற்றினர். இதேபோல் மற்றொரு நிர்வாகியையும் போலீசார் அழைத்துச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டமளிப்பு விழா
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு் பட்டங்களை வழங்கினார். தஞ்சைக்கு வருகை தரும் கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தப்போவதாக கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்து இருந்தனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் அரவிந்தசாமி, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் படித்து எம்.பில் பட்டம் பெற வந்திருந்தார். அவர் வெள்ளை நிற அங்கி அணிந்திருந்தார். அப்போது அங்கு வந்த புலனாய்வுத்துறை மற்றும் தனிப்பிரிவு, கியூ பிரிவு போலீசார் விழா நடந்த அரங்கிற்குள் வந்து அரவிந்தசாமியை அரங்குக்கு வெளியே அழைத்துச்சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.
கருப்பு சட்டையுடன் வந்ததால் வெளியேற்றம்
மேலும் அவர் கருப்பு சட்டை அணிந்திருந்ததால் அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று அவரிடம் கருப்பு கொடி உள்ளிட்ட ஏதாவது பொருட்கள் இருக்கிறதா? என சோதனை நடத்தினர். சுமார் 30 நிமிடங்கள் அவரை சோதனை நடத்திய பின்னர் மீண்டும் விழா அரங்குக்கு அழைத்து வந்தனர்.
இந்த நிலையில் விழா அரங்கத்துக்குள் கவர்னர் வந்ததும் போலீசார் வலுக்கட்டாயமாக இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் அரவிந்தசாமியை அரங்கத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்று தங்களது பாதுகாப்பில் வைத்துக் கொண்டனர்.
இதேபோல் முனைவர் பட்டம் பெற வந்த தமிழ்நாடு மாணவர் கூட்டியக்கத்தின் மாவட்டத் தலைவர் ஜான்வின்சென்ட் என்பவரையும் போலீசார் பட்டம் பெறுவதற்கு முன்பாக வலுக்கட்டாயமாக அரங்கத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்றனர்.
பட்டம் வழங்கப்பட்டது
தொடர்ந்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் நடந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு புறப்பட்டு சென்றார். அவர் சென்ற பின்னர் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன், அரவிந்தசாமி மற்றும் ஜான்வின்சென்ட் ஆகியோருக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.