சென்னையில் இருந்து தஞ்சைக்கு சுற்றுலா வந்த இடத்தில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட கல்லூரி மாணவர் பிணமாக மீட்பு
சென்னையில் இருந்து தஞ்சைக்கு சுற்றுலா வந்த இடத்தில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட கல்லூரி மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்.
தஞ்சாவூர்:-
சென்னையில் இருந்து தஞ்சைக்கு சுற்றுலா வந்த இடத்தில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட கல்லூரி மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்.
சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள்
சென்னை போரூரை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் லிதர்சன் (வயது 21). சென்னை முகப்பேரை சேர்ந்தவர் நிதின்(21). நண்பர்களான இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர்.
நேற்று முன்தினம் இருவரும் மோட்டார் சைக்கிளில் தஞ்சைக்கு சுற்றுலா வந்தனர். தஞ்சை பெரியகோவிலை சுற்றி பார்த்து விட்டு, புகைப்படங்கள் எடுத்தனர். அதனை தொடர்ந்து மாலையில் தஞ்சை கல்லணைக்கால்வாயில், பில்லுக்காரத்தெரு அருகே குளிப்பதற்காக சென்றனர்.
ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டார்
அப்போது எதிர்பாராதவிதமாக லிதர்சன் ஆற்றில் தவறி விழுந்தார். அவரை காப்பாற்றுவதற்காக நிதினும் ஆற்றில் குதித்தார். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் தத்தளித்தனர். உடனடியாக அருகில் குளித்தவர்கள் ஆற்றில் குதித்து நிதினை காப்பாற்றினர். லிதர்சன் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். லிதர்சனை தீயணைப்பு வீரர்கள் தேடியும் கிடைக்கவில்லை. அப்போது இருள் சூழ்ந்து விட்டதால் மேற்கொண்டு தேட முடியவில்லை. இந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் நேற்று 2-வது நாளாக தேடினர். அப்போது தஞ்சையை அடுத்த பொட்டுவாச்சாவடி பகுதியில் நெய்வாய்க்காலில் லிதர்சன் உடல் மிதந்ததை கண்டுபிடித்து உடலை மீட்டனர்.
போலீசார் விசாரணை
பின்னர் லிதர்சன் உடலை பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.