கல்குவாரி குட்டையில் மூழ்கிய மாணவர் பிணமாக மீட்பு
நாட்டறம்பள்ளி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கிய மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்.
நாட்டறம்பள்ளி தாலுகா வெலக்கல்நத்தம் பையனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் கோபிநாத் (வயது 21). இவர் கோயம்புத்தூரில் உள்ள வேளாண்மை கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்த கோபிநாத் தனது நண்பர்களுடன் சுண்ணாம்பு குட்டை பகுதியில் பயன்பாட்டில் இல்லாத கல்குவாரியில் தேங்கியுள்ள நீரில் நீச்சல் பழக சென்றார். அப்போது தண்ணீரில் மூழ்கி விட்டார். உடனடியாக நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் இருந்து இரவு 10 மணி நேரம் வரை தொடர்ந்து தேடியும் கிடைக்கவில்லை. இதனால் தேடும் பணியை கைவிட்டனர்.
இந்தநிலையில் நேற்று காலை நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் மற்றும் வருவாய்த் துறையினர், நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் திருப்பத்தூர் மற்றும் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருடன் இணைந்து மாணவரை மீட்கும் பணியில் காலை 6.15 மணியளவில் ஈடுபட்டனர். 7.30 மணியளவில் மாணவர் கோபிநாத் பிணமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.