நர்சிங் கல்லூரியில் மாணவி தூக்கில் பிணமாக தொங்கினார்


நர்சிங் கல்லூரியில் மாணவி தூக்கில் பிணமாக தொங்கினார்
x

நர்சிங் கல்லூரியில் தங்கியிருந்த மாணவி, தூக்கில் பிணமாக தொங்கினார். தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் அவரது தந்தை புகார் கொடுத்துள்ளார்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா பெருமழை கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவருடைய மகள் இந்துஜா(வயது 18). இவர், கடினநெல்வயலில் உள்ள நவஜீவன் கமிட்டி நர்சிங் கல்லூரியில் தங்கியிருந்து நர்சு உதவியாளர் படிப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் இந்துஜா நேற்று முன்தினம் மதியம் உணவு அருந்தி விட்டு கழிவறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அங்கிருந்தவர்கள் சென்று பார்த்தபோது இந்துஜா கழிவறையில் துப்பட்டாவில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இந்துஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்

இதுபற்றி தகவல் அறிந்த இந்துஜாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அப்போது அவர்கள் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக வேதாரண்யம் போலீசில் இளையராஜா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி எழுதிய உருக்கமான கடிதம்

இதற்கிடையே மாணவி இந்துஜா தங்கியிருந்த அறையில் இருந்து, அவர் எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் "அப்பா... நீங்கள் மதுகுடிக்க வேண்டாம். அம்மாவை அடிக்காதீர்கள். இந்த படிப்பு எனக்கு பிடிக்கவில்லை. தனிமையில் இருப்பது பிடிக்கவில்லை. என்னை மன்னித்து விடுங்கள்" என உருக்கமாக எழுதி இருந்தார்.


Next Story