ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதி
கிருஷ்ணகிரி அடுத்த போகனப்பள்ளியில், ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி அடுத்த போகனப்பள்ளியில், ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மாணவர் விடுதி
கிருஷ்ணகிரி அடுத்த போகனப்பள்ளியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ. 3 கோடியே 35 லட்சத்து 77ஆயிரம் மதிப்பில் புதிதாக ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் மாணவர் விடுதியில் குத்துவிளக்கேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கனகராஜ், செயற்பொறியாளர் (தாட்கோ) சுதா, உதவி செயற்பொறியாளர் இமாம்காசிம், தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நவீன வசதி
பின்னர் கலெக்டர் கூறுகையில், ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதி கட்டிடம் 200 மாணவர்கள் தங்கும் வகையில் 519.26 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் 2-ம் தளம் என மொத்தம் ரூ.3 கோடியே 35 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. விடுதியில் கல்லூரி மாணவர்களுக்கு, 18 விசாலமான அறை, சாப்பிடுவதற்கு உரிய மேசை இருக்கைகளுடன் கூடிய உணவுக்கூடம், ஓய்வறை, கணினி அறை, உள்ளிட்டவைகளுடன் நவீன வசதியுடன் குளியல் மற்றும் கழிப்பறை, சோலார் மின் வசதியும் செய்யப்பட்டுள்ளது என்றார்.