நல்லூர் ஒன்றிய அலுவலக இரும்பு கதவு விழுந்து மாணவன் படுகாயம்
நல்லூர் ஒன்றிய அலுவலக இரும்பு கதவு விழுந்து மாணவன் படுகாயமடைந்தான்.
ராமநத்தம்,
வேப்பூர் அடுத்த நல்லூரை சேர்ந்தவர் வேலன். இவருடைய மகன் தமிழ்இசை(வயது 8). இவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான். இன்று மதியம், தமிழ்இசை தனது நண்பர்களுடன், நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது நுழைவுவாயில் இரும்பு கதவு திடீரென பெயர்ந்து தமிழ் இசை மீது விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த அவன் விருத்தாசலம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறான். இதுகுறித்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவு வாயில் இரும்பு கதவு பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்பட்டது. இதுகுறித்து பல முறை அதிகாரிகளிடம் எடுத்து கூறியும் கதவை மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகளின் அலட்சிய போக்கினால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இந்த கதவை உடனடியாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.