கிணற்றில் பிணமாக கிடந்த மாணவன்
கண்ணமங்கலம் அருகே மாயமான மாணவன் கிணற்றில் பிணமாக கிடந்தான்.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் ரஹமத்நகரை சேர்ந்தவர் மாலிக்பாஷா. இவரின் மகன் முகமதுஅசிம் (வயது 14). இவன், அங்குள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். 23-ந்தேதி பள்ளிக்கு சென்ற முகமதுஅசிம் வீடு திரும்பவில்லை. அவனை, பல இடங்களில் தேடிப்பார்த்தும் காணவில்லை.
இதுகுறித்து மாலிக்பாஷா கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் முகமதுஅசிமை தேடி வந்தனர். இந்த நிலையில் நாகநதி ஆற்றங்கரையோரம் உள்ள ஒரு கிணற்றில் பிணம் கிடப்பதாக கண்ணமங்கலம் போலீசுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு ெசன்று கிணற்றில் இருந்து பிணத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பிணமாக கிடந்தது முகமதுஅசிம் என்றும், நாகநதி ஆற்றங்கரையோரம் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றிருக்கலாம், அப்போது அவன் நீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம், என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.