'மாணவர் மனசு பெட்டி'... மனம் திறக்க வைத்ததா?
‘மாணவர் மனசு பெட்டி’... மனம் திறக்க வைத்ததா? என்பது குறித்து பெற்றோர், ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
மாணவர் மனசு பெட்டி
கடந்த 2019-ம் ஆண்டு பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தல் வழக்கு ஒன்றில், தீர்ப்பு வழங்கிய மகிளா கோர்ட்டு நீதிபதி சில கருத்துகளை முன்வைத்தார். அதில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகள் தங்கள் புகார்களை தெரிவிக்க புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
அதனை செயல்படுத்தும் விதமாகவும், சமீபத்தில் பள்ளி மாணவிகளுக்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் விதமாகவும் பள்ளிக் கல்வித்துறை கொண்டு வந்ததுதான் இந்த 'மாணவர் மனசு பெட்டி'. அதுமட்டுமல்ல, பள்ளிகளில் உள்ள நிறைகுறைகள், கல்விப்பாதையில் மாணவ-மாணவிகளின் மனதில் உள்ள எண்ணங்கள், தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏதுவாகவும் இது ஏற்படுத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள 31 ஆயிரத்து 214 அரசு இடைநிலைப்பள்ளிகள், 6 ஆயிரத்து 177 மேல்நிலைப்பள்ளிகளில் இந்த பெட்டியை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.1,000 நிதியையும் கல்வித்துறை ஒதுக்கியது.
உடனுக்குடன் தீர்வு
அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் இந்த 'மாணவர் மனசு பெட்டி' தலைமை ஆசிரியர் அறைக்கு முன்பாக வைக்கப்பட்டு இருக்கிறது. இதில் புகார் தெரிவிக்கும் மாணவ-மாணவிகளின் புகார்களை கண்காணிக்க தலைமை ஆசிரியர் தலைமையில், 2 ஆசிரியர்கள், ஒரு பெற்றோர், பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர், ஆசிரியர் அல்லாத பணியாளர், நிர்வாக பணியாளர், வெளி உறுப்பினர் கொண்ட பாதுகாப்பு ஆலோசனைக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு 'மாணவர் மனசு பெட்டி'யில் விழும் புகார்களை 15 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது வாரத்துக்கு ஒரு முறையோ பிரித்து பார்த்து, அதில் மாணவ-மாணவிகள் தெரிவித்து இருப்பதை பள்ளி அளவில் நிவர்த்தி செய்ய முடிந்ததை உடனுக்குடன் தீர்வு காணுகின்றனர். சிறிய புகாரைக்கூட தட்டிக்கழிக்காமல் அனைத்தையும் சரி செய்கின்றனர்.
என்ன மாதிரியான புகார்கள்?
பெரும்பாலும் பள்ளி அளவில் நிவர்த்தி செய்யப்படக்கூடிய புகார்களைதான் மாணவ-மாணவிகள் அதிகம் தெரிவிப்பதாகவும், அதனை ஓரிரு நாட்களில் சரிசெய்து விடுவதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவிக்கிறது. அந்தவகையில், ஆசிரியர்கள் வீட்டு பாடம் அதிகம் கொடுக்கிறார்கள். அதை குறைத்து கொடுக்க சொல்லுங்கள்.... வகுப்பு தலைவன் என்னை அதிகம் திட்டுகிறான்... வகுப்பறையில் மின் விசிறி சரியாக சுழலுவதில்லை... உடற்கல்வி பாடவேளையில் வேறு வகுப்பு ஆசிரியர் பாடம் எடுப்பதை தவிர்க்கவேண்டும்... என்பது போன்ற வகுப்பறை சார்ந்த புகார்கள்தான் பெருமளவில் இடம்பெறுகின்றன.
இதுதவிர வகுப்பறையில் சில மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுத்துகிறார்கள்... தவறான வார்த்தைகளை சிலர் பேசுகிறார்கள்... ஒழுங்கீனமாக சில மாணவர்கள் நடக்கிறார்கள்... என்பது போன்ற நல்ல நோக்கத்துடனும் அவ்வாறு ஈடுபடுபவர்களின் பெயர்களை குறிப்பிட்டு புகார்களையும், பள்ளிகளில் கழிவறை சுத்தம் செய்யப்படாமல் இருக்கிறது... கழிவறை கதவு உடைந்துள்ளது... குடிநீர் வசதி குறைவாக இருக்கிறது... செடிக்கு தண்ணீர் ஊற்றாமல் இருக்கிறது... என்பது போன்ற பொதுநல புகார்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
'சானிட்டரி நாப்கின்' வையுங்கள்...
மேலும், வீட்டில் சொல்ல முடியாத சிலவற்றையும் மாணவ-மாணவிகள் மனம் திறந்து பெயருடன் குறிப்பிட்டு இந்த பெட்டியில் கடிதமாக எழுதி போடுகிறார்கள். சிலர் நேரடியாக ஆசிரியர்களிடமும் தெரிவிக்கிறார்கள். அந்த மாணவர்களை அழைத்து பேசுவதோடு, சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோரிடம் முறைப்படி ஆசிரியர்கள் எடுத்துக்கூறுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், என்னுடைய நண்பர் கடந்த சில நாட்களாக சரியாக பேசவில்லை. உடனே அழைத்து என்னிடம் பேச வையுங்கள், கல்வி சுற்றுலா அழைத்து செல்லுங்கள், சமையல் போட்டி நடத்துங்கள், ஓடி விளையாட அனுமதியுங்கள், பள்ளியில் 'சானிட்டரி நாப்கின்' எந்திரம் வையுங்கள் போன்றவையும் இந்த புகார் பெட்டியில் புகார்களாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காதல் கடிதம்
என்னதான் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டாலும், அதில் சில முகம் சுழிக்க வைக்கும் சம்பவங்கள் நிகழாமல் இருக்காது. அதன்படி, சமீபத்தில் ஒரு பள்ளியில் மாணவர் மனசு பெட்டியில் பெயர் குறிப்பிடாமல் காதல் கடிதம் போடப்பட்ட தகவல்களும் வெளியாகின.
நோக்கம் நிறைவேறி இருக்கிறதா?
எந்த நோக்கத்துக்காக இந்த 'மாணவர் மனசு பெட்டி' திட்டம் கொண்டு வரப்பட்டதோ? அது நிறைவேறி இருக்கிறதா? என்பது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி:- ''எங்களது பள்ளியில் மாணவிகள் பலர் மாணவர் மனசு பெட்டியில் எழுதி போடுவது உண்டு. இதில் கழிப்பறை வசதி, தண்ணீர் வசதி குறித்து அதிகம் எழுதியிருக்கின்றனர். அந்த குறைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டியை 15 நாட்களுக்கு ஒரு முறை திறந்து பார்ப்பது வழக்கம். சில நேரங்களில் மாணவிகளின் கல்வி நலனுக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை பற்றி தங்களுக்கு சிலர் பிடிக்கவில்லை என எழுதி போட்டுள்ளனர். இதில் மாலையில் 'ஸ்டடி கிளாஸ்' வேண்டாம் என எழுதியிருந்ததை பார்க்க முடிந்தது'' என்றார்.
மாணவர் மனசு பெட்டிக்கு வரவேற்பு
கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவரின் தந்தை ஜெய்னுதீன்:- கோட்டைப்பட்டினம் அரசு பள்ளிகளில் மாணவர் மனசு என்று புகார் பெட்டி திட்டம் தொடங்கப்பட்டு அது அனைத்து அரசு பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பள்ளிகள் குறித்து குறைகள் மற்றும் கற்பித்தல் குறித்து குறைகள், அடிப்படை தேவைகள் குறித்து குறைகள் போன்றவற்றை இந்த பெட்டியில் எழுதி போடுகையில் அதனை பள்ளி நிர்வாகம் உடனே சரி செய்து வருகின்றனர். முன்பு இது போன்ற குறைகளை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் நேரில் சென்று தெரிவித்தால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு இடையே இருக்கும் பிணைப்பு விலகக்கூடும் போன்ற ஒரு நிலை ஏற்படும் சூழல் உருவாகும். இப்போது இந்த பெட்டியில் புகார் தெரிவிக்கும் போது அதுபோன்ற நிகழ்வை நடைபெறாமல் தடுக்கலாம். இதனால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு இடையே உள்ள உறவு வழக்கம் போல் இருந்து கொண்டே இருக்கும். இது பள்ளியின் வளர்ச்சிக்கு ஒரு உந்துகோளாக அமையும். தமிழக அரசின் இந்த திட்டம் மிகவும் வரவேற்பு கூறியது என்றார்.
குறைகளை அச்சமின்றி தெரிவிக்கின்றனர்
கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் லோகேஸ்வரனின் தந்தை முத்து கூறியதாவது:- மாணவர் மனசு பெட்டியில் மாணவர்கள் மனதில் தோன்றும் அனைத்து குறைகளையும் எழுதி போட்டால் ஆசிரியர்கள் புகாரில் குறிப்பிட்டுள்ள குறைகளை உடன் நிவர்த்தி செய்கிறார்கள். இதனால் மாணவர்கள் தங்கள் மனதில் தோன்றும் குறைபாடுகளை அச்சமின்றி தெரிவிக்கின்றனர். இந்த திட்டம் மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே பாலமாக இருக்கிறது. எனவே இத்திட்டம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்றார்.
மாணவிகளுக்கு பயனுள்ளதாக உள்ளது
மணமேல்குடி அரசின் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ராஜஸ்ரீயின் தாய் ராஜலெட்சுமி:- மாணவர் மனசு பெட்டி சிறப்பான முறையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அனைத்து மாணவிகளும் தங்களுக்கு ஏற்படக்கூடிய குறைகளை புகாராக செலுத்திய பிறகு அதனை உடனே பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பாடம் தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள், தேர்வு விபரங்கள் காலை, மாலை சிறப்பு வகுப்பு குறித்து மாணவிகளின் புகாருக்கு ஏற்ப பரிசளித்து ஆசிரியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த மாணவர் மனசு பேட்டி மாணவிகளுக்கு பெரும் பயனுள்ளதாக உள்ளது என்றார்.
பலன்களை அனுபவித்து வருகிறோம்
கந்தர்வகோட்டை அருகே கோமாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் செல்வகுமார்:- மாணவர்களாகிய நாங்கள் எங்கள் மனதில் தோன்றும் பள்ளியில் உள்ள குறைபாடுகளை தெரிவிக்க இந்த மாணவர் மனசு புகார் பெட்டி நல்ல பயனுள்ள திட்டமாக இருக்கிறது. இதன் மூலம் பள்ளி தூய்மை, குடிநீர் வசதி, விளையாட்டு மைதான பராமரிப்பு, கழிப்பறை வசதி போன்ற பல்வேறு மாணவர்கள் அடிப்படை பிரச்சினை குறித்து கூறுவதற்கு எளிமையான வழியாக இருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் நாங்கள் எங்களது மனதில் உள்ள குறைகளை அச்சமின்றி தெரிவிக்க வசதியாக இருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பல நல்ல விஷயங்கள் நிறைவேற்றி அவற்றின் பலன்களை நாங்கள் அனுபவித்து வருகிறோம் என்றார்.
கடிதத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது
சந்தைபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவர் ராகேஷ் யாகவன்:- மாணவர் மனசு பெட்டி நல்ல பயனுள்ளதாக உள்ளது. மாணவர்களின் மனதில் எழும் கேள்விகள், சந்தேகங்கள், குறைகள் தொடர்பானதை அந்த பெட்டியில் எழுதி போட வசதியாக உள்ளது. நேரிடையாக ஆசிரியரிடம் தெரிவிக்க முடியாததை கடிதத்தின் மூலம் தெரிவிக்க முடிகிறது. நான் அந்த பெட்டியில் ஒரு கடிதம் எழுதி போட்டிருக்கிறேன். அதற்கு தலைமை ஆசிரியரும் நடவடிக்கை எடுத்திருக்கிறார். இதனால் மாணவர் மனசு பெட்டி முக்கியமாக இருக்க வேண்டும் என்றார்.
பாலியல் தொல்லைகள் தொடர்பாக
மாணவி கார்த்திகாயினி:- பள்ளியில் உள்ளவை மட்டுமில்லாமல் வெளியிலும் எங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள், கோரிக்கைகள், வீட்டில் பெற்றோர்களின் நடவடிக்கை தொடர்பாகவும் அந்த பெட்டியில் எழுதி போடலாம் என தெரிவித்திருக்கின்றனர். இதனால் அந்த பெட்டி எங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. குறிப்பாக பாலியல் தொல்லைகள் தொடர்பாக அதில் எழுதி போட வசதியாக இருக்கும். ஆசிரியர்களிடம் நேரடியாக சொல்ல முடியாத விஷயங்களை அந்த பெட்டியில் எழுதி போட முடிகிறது. ஆசிரியர்களின் நடவடிக்கைகள், பாடங்கள் நடத்தும் முறை, வகுப்புகளில் உள்ள குறைகள், பள்ளியில் உள்ள குறைகள் பற்றியும் எழுதி போட முடியும் என்றார்.
மாணவர்கள்- ஆசிரியர்கள் உறவு வளர்ந்து உள்ளது
கறம்பக்குடி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுதா:- மாணவர் மனசு பெட்டியை பல மாணவர்கள் பயன்படுத்த தயங்குகின்றனர். அது புகார் பெட்டி என்ற எண்ணம் மாணவர்களிடம் உள்ளது. இந்த மனநிலை மாற வேண்டும். எண்ணம், செயல்பாடு, மகிழ்ச்சி வருத்தம், கோபம், பாராட்டு என மாணவர்களின் மனதில் உள்ளதை வெளிப்படுத்துவதே இதன் நோக்கம். ஒரு பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்தும் விதம் மிகவும் பிடித்திருப்பதாக கூறி ஒரு மாணவி கடிதம் போட்டிருந்தார். அது ஆசிரியர்களுக்கு ஊக்கம் தருவதாக இருந்தது. இதன் மூலம் ஆசிரியர்கள்-மாணவர்கள் நல்லுறவு வளர்ந்து உள்ளது. இதேபோல் ஒரு மாணவி தனக்கு ஓவியத்தில் ஈடுபாடு இருப்பதாகவும், ஆனால் ஊக்குவிப்பதில்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார். அந்த பள்ளியில் ஓவிய ஆசிரியர் இல்லை என்ற போதிலும் ஓவியத்தில் ஆர்வம் கொண்ட வேறு ஆசிரியர் அந்த மாணவியை ஊக்குவித்து பயிற்சி அளித்தார். இது போன்ற செயல்கள் தொடர வேண்டும். மாணவர் மனசு பெட்டி மாணவர்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிப்பதாக உள்ளது என்றார்.
ஆங்கில உச்சரிப்பு தொடர்பானவை சரியில்லை
வேறு ஆசிரியர் நியமிக்க கோரி மாணவர்கள் கடிதம்
சந்தைபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயமாணிக்கம்:- எங்களது பள்ளியில் உள்ள மாணவர் மனசு பெட்டியை அவ்வப்போது திறந்து பார்ப்பது வழக்கம். பெட்டியில் கடிதம் ஏதேனும் கிடக்கிறதா? என பார்க்கும் போது எதுவும் கிடந்தால் அதனை எடுத்து பார்த்து நிவர்த்தி செய்வது உண்டு. ஒரு கடிதம் எழுதி போட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்து அதன்பின் நடவடிக்கை எடுப்பது கால தாமதத்தை ஏற்படுத்தும். அதனால் அந்த கடிதத்திற்கு மாணவரின் மனசில் தோன்றியதை என்ன எழுதியிருக்கிறார்கள் என பார்த்துவிடுவது உண்டு. ஒரு வகுப்பில் ஒரு ஆசிரியர் சரியாக பாடம் நடத்தவில்லை, அவர் நடத்தும் பாடங்கள் புரியவில்லை. ஆங்கில உச்சரிப்பு தொடர்பானவை சரியில்லை, அவரை மாற்றிவிட்டு வேறு ஆசிரியர் நியமிக்க கோரி ஒரு கடிதத்தை மாணவர்கள் சிலர் கையெழுத்திட்டு எழுதியிருந்தனர். அந்த கடிதத்தை பார்த்த உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகுப்பிற்கு வேறு ஆசிரியர் நியமிக்க நடவடிக்கை எடுத்தேன். அதன்பின் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்றார்.