தலையில் கல்லை போட்டு கல்லூரி மாணவி படுகொலை
கெங்கவல்லி அருகே ஒரு தலைக்காதலால் தலையில் கல்லை போட்டு கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மாணவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கெங்கவல்லி:
கல்லூரி மாணவி
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சி மேலவீதியை சேர்ந்தவர் முருகேசன். விவசாயி. இவரது மகள்கள் நந்தினி (வயது 21), ரோஜா (19). இவர் ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரத்தை சேர்ந்த ராமர் மகன் சாமிதுரை (22). இவர் சென்னை தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
சாமிதுரை கூடமலைக்கு நண்பர் வீட்டுக்கு செல்லும் போது ரோஜாவை அடிக்கடி பார்த்துள்ளார். இதனால் ரோஜா மீது அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. அவர் ஒரு தலையாக ரோஜாவை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு வாரத்துக்கு முன்பு ரோஜா செல்லும் கல்லூரி பஸ்சை வழிமறித்து அதில் ஏறி அவரிடம் சாமிதுரை தகராறு செய்துள்ளார். இதுபற்றி அறிந்த ரோஜாவின் தந்தை முருகேசன், சாமிதுரையின் உறவினர்களை அழைத்து பேசி சாமிதுரையை எச்சரித்து அனுப்பினார்.
காதலிக்க வற்புறுத்தல்
இந்த நிலையில், நந்தினிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதனால் நேற்று முருகேசன் தனது மனைவியுடன் திருமண அழைப்பிதழ் கொடுக்க வெளியே சென்று விட்டார். நேற்று மாலை 6 மணி அளவில் தங்களது விவசாய தோட்டத்தில் நந்தினியும், ரோஜாவும் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு சாமிதுரை வந்துள்ளார். அவர் ரோஜாவிடம் நேரடியாக சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். அதற்கு ரோஜா மறுத்துள்ளார்.
இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சாமிதுரை கையில் வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து ரோஜா மீது ஊற்றி உள்ளார். மேலும் ரோஜாவின் அக்காள் நந்தினி மீதும் மண்எண்ணெயை ஊற்றினார். தொடர்ந்து ரோஜாவை தீவைத்து கொளுத்த முயன்றபோது, அதனை நந்தினி தடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் நந்தினி தப்பி ஓடிவிட்டார்
கல்லை தூக்கி போட்டு கொன்றார்
ஆனால் ரோஜா அருகில் உள்ள வயலில் தவறி கீழே விழுந்து விட்டார். இதில் அவரது உடம்பு முழுவதும் சேறு ஆனதால் சாமிதுரையால் தீயை பற்ற வைக்க முடியவில்லை. உடனே அவர் அருகில் இருந்த கல்லை தூக்கி ரோஜாவின் தலையில் போட்டார். இதில் படுகாயம் அடைந்த ரோஜா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்த சாமிதுரை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சாமிதுரையை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் கூடமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.