மாணவி கொலை வழக்கு: ரெயில் முன் தள்ளிய வீடியோ ஆதாரம் சிக்கியது
மாணவி சத்யாவை ரெயில் முன் தள்ளி கொன்ற வழக்கில் வீடியோ ஆதாரத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
சென்னை,
சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று தமிழகத்தையே உலுக்கிய பகீர் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. கல்லூரி மாணவி சத்யாவை, சதீஷ் என்ற வாலிபர் மின்சார ரெயில் முன்பு தள்ளிவிட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அன்றைய தினம் அரங்கேறியது.
மாணவி சத்யாவை வாலிபர் சதீஷ் வெறித்தனமாக காதலித்து வந்துள்ளார். ஆரம்பத்தில் அவரது காதலை ஏற்று அவரோடு சுற்றிய மாணவி சத்யா பின்னர் அவரது பெற்றோரின் எதிர்ப்பால் அவருடனான தொடர்பை துண்டித்து விட்டார். தனது காதலை தூக்கி எறிந்த ஆத்திரத்தில் மாணவி சத்யாவை துடிக்க, துடிக்க ரெயில் முன்பு தள்ளிவிட்டு சதீஷ் கொலை செய்துவிட்டார்.
சி.பி.சி.ஐ.டி. விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக முதலில் மாம்பலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்கள். சதீஷ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு எடுத்துள்ளனர்.
சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ஜியா உல் ஹக் தலைமையின் கீழ் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செல்வக்குமார், புருஷோத்தமன் ஆகியோர் மேற்பார்வையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரம்யா, அகல்யா, வளர்மதி, மேரி ஆகியோர் 4 குழுக்களாக பிரிந்து இந்த வழக்கை அதிரடியாக விசாரித்து வருகிறார்கள்.
மாணவி சத்யாவை கொலை செய்தது குறித்து கொலையாளி சதீஷ் கொடுத்த வாக்குமூல ஆவணத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
மாணவி சத்யாவை ரெயில் முன்பு தள்ளி விடப்பட்டத்தை நேரடியாக பார்த்த சில பயணிகள், மாணவியின் தோழிகளிடம் ஏற்கனவே ரெயில்வே போலீசார் விசாரித்துள்ளனர். அது தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் நிலை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மின்சார ரெயில் டிரைவர்
மாணவி சத்யா கொலை செய்யப்பட்டதற்கான நேரடி சாட்சிகளிடம் நடத்திய விசாரணை விவரங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளது. அந்த சாட்சிகளிடம் நாங்களும் விசாரித்து வருகிறோம். இதில் முக்கியமான ஆதாரம் மாணவி ரெயில் முன்பு தள்ளி விடப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவு ஆகும். கொலையாளி சதீஷ் மாணவி சத்யாவை ரெயில் முன்பு தள்ளிவிட்ட கண்காணிப்பு கேமரா காட்சி எங்களுக்கு கிடைத்துள்ளது. அடுத்தகட்டமாக மாணவி சத்யாவை ரெயில் முன்பு தள்ளி விட்ட காட்சியை மின்சார ரெயில் டிரைவர் கோபால் பார்த்துள்ளார்.
அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் கொலையாளி சதீஷை காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளோம். அடுத்தக்கட்டமாக சட்டப்பூர்வமான சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. மாணவி சத்யாவுக்கும், வாலிபர் சதீசுக்கும் காதல் பிரச்சினை இருந்தது தொடர்பாக பரங்கிமலை போலீஸ்நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டு அதற்கு பரங்கிமலை போலீசார் சி.எஸ்.ஆர். ரசீது கொடுத்துள்ளனர். அதை கைப்பற்றி உள்ளோம்.
விரைவில் குற்றப்பத்திரிகை
பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் இனி மேல் சத்யாவை பின் தொடர மாட்டேன் என்று சதீஷிடம் எழுதி வாங்கி இருக்கிறார்கள். அந்த நகலையும் வாங்கி உள்ளோம். மாம்பலத்தில் மாணவி சத்யாவை பின்தொடர்ந்து சென்று வாலிபர் சதீஷ் தாக்கி உள்ளார். அது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் மாம்பலம் போலீசார் ஒரு வழக்குப்பதிவு செய்து சதீஷை கைது செய்து பின்னர் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவித்துள்ளனர். இனிமேல் காதல் என்று சொல்லி சத்யாவை பின்தொடர மாட்டேன் என்று மாம்பலம் போலீஸ் நிலையத்திலும் சதீஷ் எழுதிக்கொடுத்துள்ளார். அந்த நகலும் கிடைத்துள்ளது.
இதுபோல் வழக்கிற்கு தேவையான முக்கியமான ஆவணங்களை கடந்த 2 நாட்களில் கைப்பற்றி உள்ளோம். இந்த கொலைக்கு காதல் பிரச்சினைதான் முக்கிய பின்னணி காரணமாக இருந்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அடுத்து மாணவி சத்யாவை தொடர்ந்து பின்னால் சென்று சதீஷ் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதற்குரிய சாட்சிகளும் கிடைத்துள்ளது. இறுதியாக மாணவி சத்யாவை ரெயில் முன்பு தள்ளி கொன்றதற்கான வீடியோ காட்சியும் உள்ளது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.