மாணவி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை


மாணவி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
x

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

சேலம்

மூட்டை தூக்கும் தொழிலாளி

சென்னை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் சாம்சன் மகன் அருண்குமார் (வயது 26). இவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு அருண்குமார் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். அப்போது பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து கொண்டிருந்த சேலத்தை சேர்ந்த 16 வயதுடைய மாணவியை ஏற்காட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். அங்கு அருண்குமாருக்கும், அந்த மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இதனிடையே அதே ஆண்டு ஜூலை மாதம் அருண்குமார், மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, அவரை சென்னைக்கு அழைத்து சென்றார். பின்னர் அங்கு அவர் மாணவியை திருமணம் செய்ததுடன், பாலியல் பலாத்காரம் செய்தார். இதற்கிடையில் மகளை காணவில்லை என்று மாணவியின் தாய், கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

20 ஆண்டுகள் சிறை

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து மாணவியை கடத்தி சென்று குழந்தை திருமணம் செய்ததுடன், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதால் அருண்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது.

இந்தநிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது மாணவியை குழந்தை திருமணம் செய்ததுடன், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக அருண்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.36 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.


Next Story