மாணவர் திறன் போட்டியில்நாகலாபுரம் பள்ளி மாணவர்கள் சாதனை
மாணவர் திறன் போட்டியில் நாகலாபுரம் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் இயங்கும் "அனைத்திந்திய குடிமக்கள் வளர்ச்சி மையம்" சார்பில் மாணவர் திறன் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல் நிலைப்பள்ளியை சேர்ந்த 52 மாணவ-மாணவிகள் பங்கு பெற்றனர். இதில் 8-ம் வகுப்பு மாணவி தாரணி சிறந்த கையெழுத்துக்கான கலாஸ்ரீ பதக்கத்தையும், 9-ம் வகுப்பு மாணவி நிகிர்தா சிறந்த ஓவியத்துக்கான கலா ரத்னா பதக்கத்தையும் பெற்றனர். சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு பள்ளி நிர்வாகக்குழு தலைவர் தங்கமணி தலைமை தாங்கினார். முதுகலை ஆசிரியர் ரவிச்சந்திரன், ஆசிரியைகள் கவிதா மற்றும் வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சுப்புலட்சுமி வரவேற்றார். சாதனை படைத்த மாணவிகள் மற்றும் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டப்பட்டனர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.