வகுப்புகளை புறக்கணித்து மாணவ-மாணவிகள் தர்ணா
வகுப்புகளை புறக்கணித்து மாணவ-மாணவிகள் தர்ணா
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே அரசு கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவ-மாணவிகள் தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடிப்படை வசதிகள்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தண்டலச்சேரியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் கஜா புயலின் போது கடுமையாக சேதமடைந்தது. அதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும். குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்.
கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் கடந்த சிலநாட்களுக்கு முன்பு கல்லூரி வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
இந்தநிலையில் நேற்று மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தண்டலச்சேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஈடுபட்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த போராட்டம் 1 மணிநேரம் நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.