கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை


கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை
x

ஆத்தூர் அருகே கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார். காப்பாற்ற முயன்ற தந்தையும் பலியானார்.

சேலம்

ஆத்தூர்

ஆத்தூர் அருகே கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார். காப்பாற்ற முயன்ற தந்தையும் பலியானார்.

பள்ளி மாணவி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பைத்தூர் கிராமம் 9-வது வார்டை சேர்ந்தவர் கணேசன் (வயது 44), எலக்ட்ரீசியன். இவருடைய முதல் மனைவி சத்யா. இவர்களுக்கு பிரவீணா, மேகலா என்ற 2 மகள்கள் இருந்தனர். பிரவீணாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. பிளஸ்-2 மாணவியான மேகலா தற்போது நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சியடைந்தார். முதல் மனைவி சத்யா இறந்துவிட்டதால் கணேசன் வெள்ளையம்மாள் என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் பிரவீண் என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில் பிளஸ்-2 முடித்த மேகலா தனது தந்தையிடம் கல்லூரியில் சேர்ந்து மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் இதற்கு கணேசன் மறுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தந்தை, மகள் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் பிரவீண் டி.வி.யில் கார்ட்டூன் படம் பார்த்துள்ளான். அப்போது மேகலா ரிமோட்டை எடுத்து வேறு ஒரு சேனலை மாற்றினார். இதனால் பிரவீண் அழுதுள்ளான்.

அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்த கணேசன், மேகலாவிடம் இருந்து டி.வி. ரிமோட்டை வாங்கி கீழே போட்டு உடைத்தார். இதனால் தந்தை, மகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மனவேதனை அடைந்த மேகலா நான் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கூறிவிட்டு வீட்டின் அருகில் உள்ள கிணற்றை நோக்கி ஓடினார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணேசன் மகளை காப்பாற்றுவதற்காக பின் தொடர்ந்து ஓடினார். ஆனால் அதற்குள் கிணற்றில் குதித்த மேகலா தண்ணீரில் மூழ்கி பலியானார். அதே நேரத்தில் மகளை காப்பாற்ற கணேசனும் கிணற்றுக்குள் குதித்தார். எதிர்பாராதவிதமாக அவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த வெள்ளையம்மாள் சத்தம் போட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர்.

மாணவி உடல் மீட்பு

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் சுமார் ஒரு மணி நேரம் போராடி மாணவி மேகலாவின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தொடர்ந்து கணேசனின் உடலை தேடி வருகின்றனர்.

மேலும் சம்பவ இடத்துக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், ஆத்தூர் ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மேகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story