மாணவி தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்


மாணவி தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
x

சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு

பவானி

சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாணவி தற்கொலை

திருச்சி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தொழில்நுட்ப பணியாளராக பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி சித்ரா. இவர்களுடைய மகள் வர்ஷா (வயது20). இவர் ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் உள்ள சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரி (ஐ.ஆர்.டி.டி.) விடுதியில் தங்கியிருந்து கல்லூரியில் பி.இ. 3-ம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வந்தார்.

இந்த நிலையில் வர்ஷா நேற்று முன்தினம் இரவு விடுதி அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வர்ஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

இதற்கிடையே ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி, பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி, பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பொன்னம்மா, அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று வர்ஷா தங்கி இருந்த அறையை சோதனை செய்தனர். மேலும் கல்லூரி முதல்வர், விடுதி காப்பாளர், மாணவிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து வர்ஷாவின் தாய் சித்ரா சித்தோடு போலீசில் அளித்த புகாரில், தனது மகள் வர்ஷாவின் காதில் வண்டு நுழைந்ததால் சிரமப்பட்டு் வந்ததாக தெரிவித்தார்.

சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

இந்த நிலையில் தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று மாணவி வர்ஷா தற்கொலை வழக்கு விசாரணையை ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு குற்ற புலனாய்வுத்துறைக்கு (சி.பி.சி.ஐ.டி.) மாற்றி உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் சி.சங்கீதா நேற்று விசாரணையை தொடங்கியுள்ளார்.

மேலும் கோவை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் தலைமையிலான போலீசாரும் ஈரோடு வந்து விசாரித்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மாணவிய வர்ஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை பெற்றுக்கொண்ட அவர்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். வர்ஷா பயன்படுத்திய செல்போன், மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றி மாணவியின் மரணத்துக்கு வேறு காரணம் உள்ளதா? என்று புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story