போதையால் பாதை மாறும் மாணவர்கள்-நல்வழிப்படுத்துவது எப்படி?


தினத்தந்தி 8 Dec 2022 12:15 AM IST (Updated: 8 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

குடிப்பவர்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களும், அச்செயல்களும் ஒரு காலத்தில் அவமானமாகப் பார்க்கப்பட்டன.

இப்போது அது ஒரு கவுரவமாக மாறிவருகிறது என்பதை வெட்கப்படாமல் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அதிலும் இளைய தலைமுறைகள் அதில் சிக்கி தள்ளாடுவதை நினைக்கிற போது வெட்கப்பட்டே தீரவேண்டும்.

விதிகளால் என்ன பயன்?

கல்வி நிறுவனங்கள் அமைந்து இருக்கும் இடங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்ற அரசின் உத்தரவு இருக்கிறது.

21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்பது அரசின் விதியாக இருக்கிறது.

விதிகளும், உத்தரவுகளும் இருந்து என்ன பயன்? தொட்டுவிடும் தூரங்களில் கெட்டுப்போகும் சூழல்கள் கொட்டிக்கிடக்கிறபோது, அது இளைஞர்களை எளிதில் பற்றிக்கொள்கிறது.

புத்தகங்கள் இருக்க வேண்டிய பைகளில் மதுப்பாட்டில்களையும், பேனாக்கள் பிடிக்க வேண்டிய கைகளில் சிகரெட்டுகளையும் பார்க்கிறபோது மனம் பதைபதைக்கிறது.

வகுப்பறைகளிலும், கழிப்பறைகளிலும் மாணவ, மாணவிகள் குடித்துவிட்டு கூத்தடிப்பதும், அதை வலைத்தளங்களில் பரப்பிவிட்டு மகிழ்ச்சியில் திளைத்திருப்பதும் என்ன பண்போ? தெரியவில்லை.

முன்பு எல்லாம் ஆசிரியர் அடித்தார் என்று பெற்றோர்களிடம் வந்து புகார் சொன்னால், ''நீ என்ன தவறு செய்தாய்?'' என்று கேட்பார்கள்.

இப்போது வந்து சொன்னால், ''அவர் எப்படி என் பிள்ளையை அடிக்கலாம்?'' என்று பதிலுக்கு கேட்பார்கள்.

இந்த மாற்றம்தான் இளைய சமூகத்தை இதுபோன்ற இழிநிலைக்கு இழுத்துப்போகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தவறுக்கு ஆசிரியரிடம் அடிவாங்காத மாணவர்கள் பின்னாட்களில் சமூகக் குற்றங்கள் செய்து போலீசாரிடம் அடிவாங்கும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள்.

போதைப்பொருட்கள்

'போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற பிரசார இயக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிவைத்தார். போதைப் பொருட்கள் ஒழிப்பு வேட்டையில் தனிப்படை போலீசார் களம் இறக்கப்பட்டு இருக்கிறார்கள். தேடுதல் வேட்டையில் போதைப் பொருட்கள் கடத்தல், விற்பனை கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இருந்தாலும் கஞ்சா, குட்கா புகையிலை பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை என்பதே நிதர்சன உண்மை.

சென்னை மாநகரில் நடைபெறும் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களில் பிடிபடும் குற்றவாளிகளில் 18 வயதுக்கு குறைந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாக இருக்கிறது.

போதைப் பழக்கத்தால் தவறான பாதைக்கு செல்லும் மாணவர்களையும், சமூக விரோதச் செயல்களால் தடம் மாறிப்போகும் இளைய சமூகத்தையும் நல்வழிப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இதுபற்றி சமூக நலன்களில் அக்கறை உள்ளவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

தடுக்க முடியும்

மனநல ஆலோசகர் சங்கமித்ரை:-

சமுதாயத்தில் ஒரு குழந்தை நல்ல முறையில் வளர்வது என்பது முதலில் பெற்றோர் கையில்தான் இருக்கிறது. குழந்தைகள் வளரும் போது அறியாமல் செய்யும் தவறுகளை, ஏன் இப்படி செய்தாய்? என்று கண்டிக்க கூடாது. இனிமேல் இப்படி செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கி புரிய வைக்க வேண்டும்.

கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் கல்வி அமலில் இருந்ததால் செல்போன் பற்றிய புரிதல் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே செல்போனில் நல்ல விஷயங்கள் எது?, கெட்ட விஷயங்கள் எது? என்பதை சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.

பள்ளியில் வகுப்புகள் நடத்தும்போது மாணவர்கள் மத்தியில் நல்லொழுக்க பழக்கங்கள் குறித்து ஆசிரியர்கள் அவ்வப்போது எடுத்துரைக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் தவறான பாதையில் செல்வதை தடுக்க முடியும்.

மதுபானம் எப்படி கிடைக்கிறது?

தமிழ்நாடு 'டாஸ்மாக்' பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.தனசேகரன்:-

இன்றைய காலக் கட்டத்தில் பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைக் கலாசாரம் உருவாகி உள்ளது. குடிப்பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாகி வருவது உண்மைதான். ஆனால் 'டாஸ்மாக்' கடைகளில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவது இல்லை. பள்ளி மாணவர்கள் 'டாஸ்மாக்' கடைகள் முன்பு நின்றுக்கொண்டிருக்கும் மதுபிரியர்களிடம் ரூ.5, ரூ.10 கூடுதல் விலை கொடுத்து எப்படியோ மதுபாட்டில்களை வாங்கி விடுகிறார்கள். அதேப்போன்று பார் ஊழியர்கள் மூலமாகவும் வாங்கி விடுகிறார்கள் என்று தகவல்கள் வருகின்றன. சில மாணவர்கள் போதையிலே பள்ளிக்கு சென்று வருகிறார்கள் என்று வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

மாணவர்களுக்கு மதுப்பாட்டில்களை வாங்கித் தரும் நபர்களை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும்.

தொடர் கண்காணிப்பு

மொரப்பூரை சேர்ந்த கலை அறிவியல் கல்லூரி முதல்வர் குணசேகரன்:-

போதையையும், மனக்கிளர்ச்சியையும் கொடுக்கும் பொருட்கள் எளிதில் கிடைக்கும் சூழல் தற்போது அதிகரித்து விட்டது. இதனால் நகரப் பகுதிகளில் போதைப் பொருட்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் கிராமப்புற பகுதிகளில் போதைப் பொருட்களின் பயன்பாடு குறைவாகவே உள்ளது.

போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மாணவ பருவத்தில் மது அருந்துதல், புகையிலை மற்றும் போதை ஏற்படுத்தும் பாக்குகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பழக்கங்கள் மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கிறது? என்பது குறித்து மாணவர்களுக்கு புரிய வைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. உணவு இடைவேளை மற்றும் பிற நேரங்களில் மாணவர்களின் செயல்பாடு சந்தேகத்திற்கு இடமாக இருக்கிறதா? என்பதை தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்காலம் கேள்விக்குறி

அரசு கல்லூரி மாணவர் நந்தகுமார்:-

கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் கல்வி அமலில் இருந்ததால் செல்போன் பற்றிய புரிதல் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மாணவர் பருவத்தில் போதைப் பொருட்களின் மீது நாட்டம் ஏற்பட்டால் கல்வியை முறையாக முடிப்பதில் சிக்கல் ஏற்படும். மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும். இது குறித்து கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் இடையே நல்ல பழக்க வழக்கங்கள் குறித்து ஆசிரியர்கள் அவ்வப்போது எடுத்துக் கூற வேண்டும். நன்னெறி வகுப்புகள் அதிக அளவில் நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் தவறான பாதையில் செல்வதை தடுக்க முடியும்.

சினிமாக்களின் தாக்கம்

அரசு கல்லூரி மாணவி புனிதா:-

போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளி, கல்லூரிகளில் இப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் வாழ்க்கையில் சினிமாக்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

எனவே சினிமாக்கள் மாணவர்கள் மத்தியில் தீய பழக்கங்கள் ஏற்படுவதற்கும், வன்முறையை தூண்டுவதற்கும் உறுதுணையாக இருக்க கூடாது. சினிமாக்கள் மூலம் நல்ல கருத்துகள், சிந்தனைகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

ஏழை குடும்பங்கள் பாதிப்பு

சமூக ஆர்வலர் முரளி:-

தமிழகத்தில் போதைப்பழக்கம் மாணவ, மாணவிகள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அரசு, ஆசிரியர், பெற்றோர், சமூகம் என அனைத்துத் தரப்பும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். போதைப் பொருட்களை ஒழிக்க அரசு தீவிர கண்காணிப்பு பணியை செய்து வருகிறது. இருந்தபோதிலும் போதைப் பொருட்கள் எளிதாக கிடைக்கும் சூழலும் இருக்கிறது.

மதுப்பழக்கம் மற்றும் போதைப் பழக்கம் ஏழை, எளிய குடும்பங்களையே கடும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. டாஸ்மாக் கடைகளில் யார் வேண்டுமானாலும் மது வாங்கிக்கொள்ளலாம் என்ற நிலையை மாற்ற வேண்டும். அண்மைக்காலமாக சந்து கடைகளில் அதிகரித்துள்ள மது விற்பனையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story