8 வயதுக்கு உட்பட்ட குழ்நதைகளின் கற்றல் இடைவெளிக்கு தீர்வு; 'எண்ணும், எழுத்தும்' திட்டம் இலக்கை நோக்கி செல்கிறதா? ஆசிரியர்கள், பெற்றோர் கருத்து


8 வயதுக்கு உட்பட்ட குழ்நதைகளின் கற்றல் இடைவெளிக்கு தீர்வு;  எண்ணும், எழுத்தும் திட்டம் இலக்கை நோக்கி செல்கிறதா?  ஆசிரியர்கள், பெற்றோர் கருத்து
x
தினத்தந்தி 13 Dec 2022 12:15 AM IST (Updated: 13 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

கொரோனா நோய்த்தொற்று குறைந்த போதிலும், அதனால் விளைந்த பாதிப்புகள் ஒவ்வொரு துறையிலும் மறைந்தே இருக்கத்தான் செய்கின்றன.

கற்றல் இடைவெளி

தொழில், கல்வி, சுகாதாரத்தில் அதன் தாக்கம் பெரிய அளவில் இருந்து வருவதை கடந்த ஓரிரு ஆண்டுகளாக நாம் அனுபவப்பூர்வமாக உணர்ந்து வருகிறோம். அதில் இருந்து மீள மத்திய, மாநில அரசுகளும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

கல்வியை பொறுத்த அளவில் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் ஆரம்ப கல்வியை தொடங்கும் மாணவர்களின் கல்வித்திறனே அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை பல்வேறு தரப்பிலான ஆய்வு முடிவுகள் எடுத்து காட்டுகின்றன.

பல குழந்தைகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களில் அடிப்படை கூட தெரியாத நிலை இருப்பது வேதனை அளிப்பதாக அவைகள் சுட்டிக்காட்டுகின்றன. இதற்கு முக்கிய காரணம், கொரோனா காலத்தில் 19 மாதங்களாக நேரடி வகுப்புகள் நடத்த முடியாமல் போனது தான். அதனால் 1-ம் வகுப்பு பாடங்கள் பற்றி முழுமையாக தெரியாமலேயே 2-ம் வகுப்பிற்கும், அதுபோல் 2-ம் வகுப்பை படிக்காமலே 3-ம் வகுப்புக்கும் குழந்தைகள் தாவி வந்திருக்கிறார்கள். இதனால் ஏற்பட கற்றல் இடைவெளியால் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு கல்வியின் பலன்களை குழந்தைகள் முழுமையாக பெறவில்லை.

எண்ணும் எழுத்தும் திட்டம்

இவ்வாறு கல்வியில் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளின் கற்றல் இடைவெளியை சீர்செய்வது, கல்வித்துறையின் மிக முக்கிய கடமையாக இருக்கிறது. அதற்காக உருவானது தான், எண்ணும் எழுத்தும் திட்டம். 2022-23-ம் கல்வி ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தை அரசு முன்னெடுக்க இருக்கிறது.

எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 13.6.2022 அன்று திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார். அதன் பிறகு அந்த திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் நடைமுறைக்கு வந்தது. அதை செயல்படுத்த, தனியாக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் ஆசிரியர் கையேடுகளும், பயிற்சி நூல்களும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.) மூலம் வழங்கப்பட்டு இருக்கிறது.

அரும்பு, மொட்டு, மலர்...

குழந்தைகளின் கற்றல் இடைவெளியை அடையாளம் கண்டு அவர்களின் திறமைக்கு ஏற்ப கல்வி கற்பிக்கும் வகையில் அவர்கள், "அரும்பு, மொட்டு, மலர்" என்று 3 பிரிவுகளாக பிரிக்கப்படுகிறார்கள். அரும்பு என்பது படிக்க தெரியாத குழந்தைகளையும், மொட்டு என்பது கொஞ்சம் படிக்க தெரிந்த குழந்தைகளையும், மலர் என்பது நன்கு படிக்க தெரிந்த குழந்தைகளையும் குறிக்கிறது. இதில் அரும்பு, மொட்டு வகையில் இருக்கும் குழந்தைகளை மலராக பூக்க வைக்க வேண்டும் என்பதே திட்டத்தின் ஒரே நோக்கம் ஆகும்.

ஆடல், பாடல், கதை சொல்லல்...

தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களை கற்று கொடுக்கும் போது, குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாக்கும் வகையில், எண்ணும், எழுத்தும் வகுப்பறையில் ஆடல், பாடல், கதை சொல்லல், வாசித்தல், செயல்பாடு, படைப்பு, பொம்மலாட்ட களங்கள் போன்ற நிகழ்வுகள் மூலம் அவர்களின் ஆர்வமும், ஈடுபாடும் ஊக்கப்படுத்தப்படுகின்றன.

இப்படியாக கடந்த 5 மாதங்களுக்கு மேல் கற்பிக்கப்பட்டு வரும் எண்ணும் எழுத்தும் திட்டம் குழந்தைகளின் கற்றல் இடைவெளியை சீர்செய்து இருக்கிறதா?. 2025-ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் எழுத்தறிவும், எண்ணறிவும் பெறவேண்டும் என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தின் இலக்கு நிறைவேறி வருகிறதா? என்பது பற்றி தர்மபுரி மாவட்ட ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

வகுப்புகளை வசீகரம்

குழிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி:-

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நீண்ட விடுமுறை விடப்பட்டதால் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கற்றலில் இடைவெளி ஏற்பட்டது. இந்த இடைவெளியை சரிசெய்ய கொண்டு வரப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி புத்தகங்கள், மிகுந்த மகிழ்ச்சியுடன் மாணவர்கள் கற்பதற்கு துணை நிற்கிறது. எழுத்துகளையும், எண்களையும் அறிமுகப்படுத்த அழகான பாடல்கள், கதைகள் வடிவமைக்கப்பட்டு மாணவர்கள் விரும்பி கற்கும் வகையில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடக்க வகுப்புகளை வசீகரமாக்கியிருக்கிறது. இந்த பாடங்கள் கற்றலில் முன்னேறும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. எண்ணும் எழுத்தும் வகுப்புகளால் மாணவ, மாணவிகளின் அடிப்படை திறன்கள் நிச்சயமாக மேம்பட்டு வருகிறது.

கற்றல் திறன் மேம்பட்டு உள்ளது

பாலக்கோடு அண்ணா அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை சுகன்யா:-

1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாணவ, மாணவிகளிடமும் குறைந்தபட்ச கற்றல் சோதனை செய்து பொது அறிவு கேள்வி கேட்டு 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களை 3 பிரிவாக பிரித்து கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த திட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

இந்த திட்டம் மூலம் ஆசிரியர்களாகிய நாங்கள் சில செயல்பாடுகளை மேற்கொள்கிறோம். அதை மாணவர்களையும் செய்ய சொல்கிறோம். அவர்கள் அதை ஆர்வமாக செய்கிறார்கள். மேலும், இதில் மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தகத்தில் செய்யப்படும் வேலைப்பாடுகளை விரும்பி செய்கிறார்கள். இதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட்டு இருப்பதை கண்கூட பார்க்க முடிகிறது.

ஆர்வத்தை தூண்டுகிறது

எம்.தொப்பம்பட்டியை சேர்ந்த குடும்ப தலைவி சுவாதினி:-

அரசு கொண்டு வந்திருக்கும் எண்ணும், எழுத்தும் திட்டம் மூலம் 3-ம் வகுப்பு படிக்கும் என்னுடைய மகளின் கற்றல் திறன் அதிகரித்து வருகிறது. வகுப்பறைகளில் ஆடல் பாடலுடன் பாடம் கற்பிக்கப்படுவதால் குழந்தைகள் விளையாட்டை போல் கல்வி கற்று கொள்வதற்கு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளிடம் கல்வி கற்கும் ஆர்வத்தை இந்த திட்டம் தூண்டுகிறது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் அனைத்து குழந்தைகளும் சிறந்த மாணவ-மாணவிகளாக உருவாகிறார்கள்.

மகிழ்ச்சிகரமான சூழல்

மேக்லாம்பட்டியை சேர்ந்த குடும்ப தலைவி அமிர்தா:-

எண்ணும் எழுத்தும் திட்டம் அரசு பள்ளிகளில் தொடக்கக் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு மற்றும் ஆடல், பாடல் மூலம் எளிதாக பாடங்களை உள்வாங்கி கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வகுப்பறைகளில் மகிழ்ச்சிகரமான சூழலை இந்த திட்டம் உருவாக்கியுள்ளது. இதனால் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் சிறுவர், சிறுமிகளிடம் அதிகரித்து உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் தொடக்கப் பள்ளிகளில் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தேவையான ஆசிரியர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். இந்த திட்டம் மூலம் மாணவர்கள் கல்வித்தரத்தில் நிச்சயமாக சிறந்த இடத்தை பிடிப்பார்கள்.

ரொம்ப பிடிச்சிருக்கு...

மாணவர்கள் சூர்யா, விமல், ராமச்சந்திரன் ஆகியோர் கூறும்போது, 'ஆசிரியர்கள் சூப்பரா சொல்லித்தராங்க... எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஆர்வமாக படிக்கிறோம். வகுப்பறையில் படிப்போடு சேர்ந்து பாடல், கதை, விளையாட்டு களம் என அனைத்தையும் சொல்லிகொடுக்கிறாங்க... கணக்கு பாடத்தில் வாய்ப்பாடுகளை மனப்பாடம் செய்ய முன்பு கஷ்டப்பட்டோம். ஆனால் இப்போது எளிதில் கற்று கொண்டோம். மேலும் கற்றுக்கொண்டு வருகிறோம்' என்றனர்.

இதுகுறித்து தொடக்கக்கல்வி உயர் அதிகாரியிடம் கேட்டபோது, 'எண்ணும், எழுத்தும் திட்டம் தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. கற்றல் இடைவெளியை சீர்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டம் அதனை சரிசெய்து வருகிறது. இந்த திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்கு ஏதுவாக ஏற்கனவே ஆசிரியர்களுக்கு 2 கட்டங்களாக பயிற்சி அளித்து இருக்கிறோம். 3-வது கட்டமாக வருகிற 15-ந்தேதி சென்னையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது' என்று தெரிவித்தார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story