'போதைக்கு மாணவர்கள் அடிமையாவது மாநில வளர்ச்சிக்கு தடை' முதல்-அமைச்சர் கவலை
‘போதைக்கு மாணவர்கள் அடிமையாவது மாநிலத்தின் வளர்ச்சிக்கான தடை ஆகும்’ என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார்.
கோவை,
இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. இந்தியாவில் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில், 18 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது. தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 21 தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது. தலைசிறந்த 100 கல்லூரிகளில் 32 கல்லூரிகள் தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது. தலைசிறந்த 100 ஆராய்ச்சி நிறுவனங்களில் 10 தமிழ்நாட்டில் உள்ளது. தலைசிறந்த 200 பொறியியல் கல்லூரிகளில் 35 கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருக்கிறது. தலைசிறந்த மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் 11 தமிழ்நாட்டில் உள்ளது.
100 மருத்துவக் கல்வி நிறுவனங்களில் 8 தமிழ்நாட்டில் இருக்கிறது. 40 பல் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் 9 தமிழ்நாட்டில் உள்ளது. 30 சட்டக் கல்லூரிகளில் 2 தமிழ்நாட்டில் உள்ளது. 30 கட்டிடக் கலைக் கல்லூரிகளில் 6 தமிழ்நாட்டில் உள்ளது.
பல்வேறு திட்டங்களை...
கல்வியில் சிறந்த மாநிலமாக நாம் இன்றைக்கு உயர்ந்து நிற்கிறோம். 100 ஆண்டுகளுக்கு முன்னால், நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் கல்விக்காக போட்ட விதைதான் இதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டு அறிவுச் சக்தியை வளர்ப்பதையே, தமிழ்நாடு அரசு தன்னுடைய கடமையாக நினைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பள்ளிக் கல்வித் துறையாக இருந்தாலும், உயர்கல்வித் துறையாக இருந்தாலும், உன்னதமான பல்வேறு திட்டங்களை இன்றைக்கு செயல்படுத்தி வருகின்றன.
அனைவருக்கும் கல்வி, அனைத்துப் பிள்ளைகளுக்கும் அடிப்படையான கல்வி, ஆரோக்கியமான கல்வி, உடற்கல்வி, உறுதி மிக்க மனவளக்கலை ஆகியவற்றைப் பள்ளி கல்வித்துறை வழங்கி வருகிறது. அனைவருக்கும் உயர்கல்வி, அனைவருக்கும் ஆராய்ச்சிக் கல்வி, திறன் மேம்பாட்டு கல்வியை தமிழக உயர் கல்வித்துறை வழங்கி வருகிறது. நான் மட்டும் முதல்வன் அல்ல, தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரும் ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக இருக்கவே 'நான் முதல்வன்' திட்டத்தை நம்முடைய அரசு இன்றைக்கு செயல்படுத்தி வருகிறது.
மாநில வளர்ச்சிக்கு தடை
இன்னும் ஐந்து, பத்தாண்டு காலத்தில், தமிழ்நாட்டு இளைஞர்கள் அடைய இருக்கும் தகுதியையும், உயர்வையும் நினைத்து நான் உள்ளபடியே பூரிப்படைகிறேன். அனைத்து ஆற்றலும் கொண்டவர்களாக, நம் மாநில இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. அதேநேரத்தில், இளைஞர் சமுதாயம் குறித்த ஒருவிதமான கவலையும் எனக்கு இருக்கிறது. போதைப் பொருள் பழக்கத்திற்கு ஒரு சிலர் அடிமையாவது கவலையாக இருக்கிறது. அதற்காகவே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நாம் தொடர்ந்து நடத்தி வருகிறோம். காரணம், அந்த பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டாக வேண்டும். புதிதாக யாரும் அடிமையாகாமல் தடுத்தாக வேண்டும்.
ஒரு மாணவன் அடிமையாவது என்பது, அவருக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்துக்கு மட்டுமல்ல, இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கே அது தடையாகிறது. அதிலும் குறிப்பாக, மாணவிகள் சிலரும் அந்தப் பழக்கத்தில் அடிமையாகி வருவது கவலை அளிக்கிறது. நல்ல கல்வியுடன், நல்லொழுக்கத்தையும் கற்றுத் தரும் கடமை அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் உண்டு.
இவ்வாறு அவர் பேசினார்.