மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழக மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. எனவே குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்குள் இருக்கும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவித்தொகைக்கு 2022-23-ஆம் கல்வியாண்டில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம். அதேபோல் http://bcmbcmw.tn.gov.in/welfshemes.htm#scholarship schemes என்ற இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம். மேலும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
பின்னர் கல்வி நிறுவனங்களின் சான்றொப்பத்துடன் விண்ணப்பத்தை பரிந்துரை செய்து ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரிக்கு அடுத்த மாதம் (ஜனவரி) 30-ந்தேதிக்குள்அனுப்பி வைக்க வேண்டும். இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு 044-29515942 எனும் தொலைபேசி எண், tngovtitscholarship@gmail.com எனும் இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.