மாணவர்கள் பள்ளிசெல்லா போராட்டம்
விளாத்திகுளம் அருகே பஸ்வசதி கோரி மாணவர்கள் பள்ளிசெல்லா போராட்டம் நடத்தினர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள கலைஞானபுரம் மற்றும் துலுக்கன்குளம் ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த 65 பள்ளி மாணவர்கள் மேல்நிலைக் கல்விக்காக சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று படித்து வருகின்றனர். இந்த கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு பஸ் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் இந்த கிராமங்களை ேசர்ந்த மாணவர்கள், தங்களது கிராமங்களில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து கிழக்கு கடற்கரை சாலைக்கு வருகின்றனர். அங்கிருந்து தனியார் பஸ்சில் கூட்டநெரிசலில் சிக்கி தினமும் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு முறையாக பஸ்வசதி செய்து தரக்கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் நேற்று தங்கள் கிராமங்களுக்கு முறையாக பஸ் வசதி செய்து தரக்கோரி பள்ளிசெல்லா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மாணவர்கள் கிராமங்களில் உள்ள மரத்தடியில் அமர்ந்து படித்துக் கொண்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து குளத்தூர் இன்ஸ்பெக்டர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக பஸ் வசதி ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு சென்றனர்.