புதிய கட்டிடம் கட்ட கோரி மாணவர்கள் போராட்டம்
தேவர்சோலை அருகே அரசு தொடக்கப்பள்ளியில் பழுதடைந்த கட்டிடத்தில் மழைநீர் ஒழுகுகிறது. இதனால் புதிய கட்டிடம் கட்ட கோரி மாணவர்களுடன் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர்,
தேவர்சோலை அருகே அரசு தொடக்கப்பள்ளியில் பழுதடைந்த கட்டிடத்தில் மழைநீர் ஒழுகுகிறது. இதனால் புதிய கட்டிடம் கட்ட கோரி மாணவர்களுடன் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழுதடைந்த கட்டிடம்
கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி பாடந்தொரை அருகே 4-வது மைல் புழுக்கொல்லியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 120 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளி கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் மழைக்காலத்தில் வகுப்பறைக்குள் மழை நீர் ஒழுகுகிறது.இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, பள்ளியில் பழமையான கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை மாணவ-மாணவிகள் வழக்கம் போல் பள்ளிக்கு வந்தனர். அவர்களுடன் பெற்றோரும் வந்து இருந்தனர்.
மாணவர்கள் போராட்டம்
பின்னர் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட கோரி பள்ளி வளாகத்தில் மாணவர்களுடன், பெற்றோர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தாசில்தார் சித்தராஜ், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார் ஆகியோர் விரைந்து வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்றனர். பின்னர் பெற்றோர் கலைந்து சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பழமையான கட்டிடத்தில் பள்ளி செயல்பட்டு வருவதால், மழைக்காலங்களில் மாணவர்கள் இருக்க முடியாத வகையில் தண்ணீர் வழிந்து ஓடுகிறது. இதேபோல் பள்ளிக்கு செல்லும் நடைபாதை பல இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.