தனியார் பள்ளிகளில் சேர குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு
வேலூர் மாவட்டத்தில் 229 தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் 229 தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு நடைபெற்றது.
குலுக்கல் முறையில் தேர்வு
தமிழகம் முழுவதும் கட்டாய உரிமை சட்டத்தின்படி ஆண்டு தோறும் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி, இந்த ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி முதல் கடந்த 18-ந்தேதி வரை ஆன்லைனில் பெறப்பட்டன. குறிப்பிட்ட பள்ளிகளில் சேர அதிகளவு மாணவர்கள் விண்ணப்பித்திருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு நேற்று நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் 229 தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின்படி 2,100 இடங்கள் காணப்பட்டன. இடஒதுக்கீட்டின் மூலம் தங்கள் பிள்ளைகளை சேர்க்க 4,870 பெற்றோர் விண்ணப்பிருந்தனர். அவர்களில் 4,451 பேரின் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்று கொள்ளப்பட்டன. அதனால் 2,100 இடங்களுக்கு மாணவர்களை தேர்வு செய்ய 229 பள்ளிகளிலும் குலுக்கல் நடைபெற்றது.
முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு
காட்பாடி சிருஷ்டி மெட்ரிக்பள்ளியில் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவதை வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் பெயர்கள் துண்டு சீட்டில் எழுதி ஒரு பெட்டிக்குள் போடப்பட்டிருந்தது. துண்டு சீட்டை ஒன்றன் பின் ஒன்றாக மாணவ-மாணவிகள் எடுத்தனர். அதில், எழுதியிருந்த பெயர்களின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பள்ளியின் 25 சதவீத இடஒதுக்கீட்டை தவிர கூடுதலாக 10 மாணவர்களையும் தேர்வு செய்தனர்.
ஆய்வின்போது வேலூர் பள்ளி துணை ஆய்வாளர் மணிவாசகன், பள்ளியின் முதல்வர் சரவணன், வருவாய்துறையினர் மற்றும் பலர் உடனிருந்தனர்.
குலுக்கலில் தேர்வான மாணவர்கள் குறிப்பிட்ட நாளில் பள்ளியில் சேராவிட்டால் கூடுதலாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அவர்களுக்கு பதிலாக சேர்க்கப்படுவர். குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு 8-ம் வகுப்பு வரை கல்வி கட்டணத்தை அரசு செலுத்தும். தனியார் பள்ளிகள் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்ந்துள்ள மாணவர்களின் பட்டியலை பள்ளி தொடங்கிய ஓரிரு நாளில் வெளியிட வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.