கூடுதலாக அரசு பஸ் இயக்கக்கோரி மாணவ-மாணவிகள் சாலை மறியல்
குத்தாலம் அருகே கூடுதலாக அரசு பஸ் இயக்கக்கோரி மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குத்தாலம்:
குத்தாலம் அருகே கூடுதலாக அரசு பஸ் இயக்கக்கோரி மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூட்ட நெரிசல்
குத்தாலம் தாலுகா நக்கம்பாடி கிராமத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்த வழித்தடத்தில் நக்கம்பாடி, கோமல், தேரழந்தூர், சேத்திரபாலபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள் இந்த அரசு பஸ்கள் மூலம் வந்து செல்கின்றனர். கூடுதல் பஸ் வசதி இல்லாததால் காலை, மாலை நேரங்களில் பஸ்களில் கூட்ட நெரிசல் ஏற்படும். இதனால் மாணவர்கள் பஸ் படி கட்டுகளில் தொங்கி கொண்டு செல்லும் ஆபத்தான நிலை உள்ளது.
சாலை மறியல்
இது குறித்து பலமுறை போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் நேற்று காலை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல பஸ்சில் ஏறினர். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்களால் பஸ்சில் ஏற முடியவில்லை.இதை 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தேரழுந்தூர் கடைவீதியில் கூடுதல் அரசு பஸ்களை இயக்க வலியுறுத்தி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த குத்தாலம் தாசில்தார் கோமதி, பாலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசித்ரா மேரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் கூடுதல் அரசு பஸ்களை இயக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.இதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். . மேலும் மாணவ-மாணவிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக தாசில்தாரிடம் அளித்தனர்.இந்த மறியலால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.