திருக்கோவிலூர் அருகே கிராமத்துக்குள் பஸ் வந்து செல்லக்கோரி மாணவர்கள் சாலை மறியல்


திருக்கோவிலூர் அருகே கிராமத்துக்குள் பஸ் வந்து செல்லக்கோரி மாணவர்கள் சாலை மறியல்
x

திருக்கோவிலூர் அருகே கிராமத்துக்குள் பஸ் வந்து செல்லக்கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

திருக்கோவிலூரில் இருந்து திருவரங்கம் கிராமத்திற்கு கூவனூர், மெலாரி பட்டு, எடையூர், அருதங்குடி, மாடாம்பூண்டி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த பஸ் கடந்த சில மாதங்களாக மேற்கண்ட கிராமங்களுக்கு வராமல் மாடாம்பூண்டி மெயின்ரோடு வழியாக சென்று வருகிறது. இதனால் கூவனூர், மெலாரிபட்டு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மாடாம்பூண்டி வரை நடந்து சென்று அங்கிருந்து பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் மாடாம்பூண்டி பஸ் நிறுத்தம் அருகே திருக்கோவிலூர்- சங்கராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் கிராம பகுதிக்கு பஸ் வந்து செல்லக்கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் திருப்பாலபந்தல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேசி விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையேற்ற மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story